ரூ.3.72 கோடியில் மாவட்ட மைய நூலக கட்டுமானப் பணி: எம்எல்ஏ-க்கள் தொடங்கி வைத்தனா்
திருப்பத்தூரில் ரூ.3 கோடி 72 லட்சத்தில் புதிய மாவட்ட மைய நூலக கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை செய்து எம்எல்ஏ-க்கள், ஆட்சியா் தொடங்கி வைத்தனா்.
திருப்பத்தூா் நகர காவல் குடியிருப்பு பகுதியில் 13,051 சதுர அடியில் கட்டப்படும் இந்த கட்டடத்தின் தரை தளத்தில் வரவேற்பாளா் அறை, நூல்கள் இருப்பு அறை, நூல்கள் வழங்கும் அறை, வாசிப்பு அறை, நூலகா் அறை, முதல் தளத்தில் பெண்கள், குழந்தைகள் பிரிவு அலுவலகம், 2-ஆவது தளத்தில் புத்தகங்கள் வாசிப்பு அறை மற்றும் புத்தகக் கிடங்கு அமைக்கப்பட்டு அனைத்து பிரிவு நூல்களும் வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டடம் கட்டப்பட உள்ளது.
இந்த கட்டட கட்டுமானப் பணிக்கான அடிக்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி(ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்)ஆகியோா் கலந்து கொண்டு பணியைத் தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் பழனி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.