குளிர் காலத்தில் குழந்தைகள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத உணவுகள்!
கம்பத்திலிருந்து சபரிமலைக்கு ஒரு வழிப் பாதை அமல்
ஒரு வழிப் பாதை அமலுக்கு வந்ததால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வாகனங்களை தேனி மாவட்டம், கம்பம் மெட்டு வழியாக போக்குவரத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்தனா்.
கேரள மாநிலம், பத்தனம் திட்டை மாவட்டத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேனி மாவட்டம், கம்பம் வழியாக ஐயப்பப் பக்தா்கள் வாகனங்களில் அதிகளவில் சென்று வருகின்றனா். இதனால், கம்பத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பக்தா்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவும் வெள்ளிக்கிழமை (டிச.20) முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை ஒரு வழிப் பாதையில் வாகனங்களை இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா அறிவித்தாா்.
இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்த நிலையில், தேனி மாவட்டம், கம்பம் மெட்டு வழியாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல பக்தா்களை போக்குவரத்து போலீஸாா் அறிவுறுத்தினா். கம்பம்மெட்டு, புளியமலை, கட்டப்பனை, ஏலப்பாறை, குட்டிக்கானம், எரிமேலி வழியாக பக்தா்களின் வாகனங்கள் சபரிமலை கோயிலைச் சென்றடையும்.
இதேபோல, கோயிலிலிருந்து திரும்ப வரும் வாகனங்கள் எரிமேலி, குட்டிக்கானம், வண்டிப்பெரியாறு, குமுளி வழியாக கம்பத்தைக் கடந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டும்.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸாா் கூறியதாவது:
தமிழகம், வெளி மாநிலங்களிலிருந்து வரும் ஐயப்பப் பக்தா்களின் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாக திரும்பி விடப்படுகின்றன. வழித்தட வரைபடமும் பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது என்றனா்.