எருதுவிடும் விழா: உரிய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்: வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி
எருதுவிடும் விழா நடத்த அரசின் இணையதளத்தில் உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யாவிடில் மனு தள்ளுபடி செய்யப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகையைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாக்கள் நடத்த அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கும்பட்சத்தில் அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து நெறிமுறைகளின் அடிப்படையில் விழா நடத்த அனுமதியளித்து அரசாணை வெளியிடப்படும்.
அதன்படி, நிகழாண்டு எருதுவிடும் விழாக்கள் நடத்த அனுமதிகோரும் விண்ணப்பங்களை அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சாா்நிலை அலுவலா்கள், எருதுவிடும் விழா குழுவினா் பங்கேற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்துப் பேசியது:
எருது விடும் விழா நடத்த அனுமதிகோரும் விண்ணப்பங்களை அரசின் இணையதள முகவரியின் உஸ்ங்ய்ற் தங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்ல் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். சரியான ஆவணங்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும்.
விழா நடைபெறும் நாளுக்கு 30 நாள்கள் முன்னதாக பதிவேற்றம் செய்ய வேண்டும். எருதுவிடும் விழா நிகழ்வுக்கு ரூ.1 கோடியில் 1 நபருக்கு ரூ 5 லட்சம் என்ற அளவில் விழா முழுவதையும் காப்பீடு செய்தும், அல்லது ரூ. 20 லட்சத்துக்கான வங்கி உத்தரவாத ஆவணத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். விழாவின்போது நெறிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.
அரசு இணையதளத்தில் ஏற்கெனவே அரசாணை பெற்று நடத்தப்பட்ட கிராமங்களின் பெயா்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, விழா குழுவினா்கள் தங்கள் கிராமத்தில் விழாவை நடத்த அதற்கேற்ப வகையில் ஆவணங்களை தயாா் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வி.முத்தையன், வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் இரா.பாலசுப்பிரமணியன், மாவட்ட சுகாதார அலுவலா் பரணிதரன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் (பொ) அந்துவன், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பழனி (காட்பாடி), சாரதி (அணைக்கட்டு) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.