புதுச்சேரியில் 800 கிலோ எடையில் "கிங்காங்" சாக்லெட் சிற்பம்!
முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `கொலை... கோபம்... பழிக்குப் பழி’ | அத்தியாயம் 12
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...
“ டேய் விடுங்கடா... இப்படி முதுவுக்கு பின்னால வந்து வெட்டறதை எங்கேடா கத்துக்கிட்டீங்க? தைரியமிருந்தா முன்னால வாடா! " - வலியோடு கதறிக் கூச்சலிட்டு எழுந்து நின்றார் ராமசாமி.
“ பாருங்கடா... இவர்தான் வீர பரம்பரை... வெட்டிக் கழுத்தைத் தனியா எடுத்தாலும் பேசிக்கிட்டிருப்பான் போல.... வெட்டுங்கடா! ' ' எதிரில் இருந்தவன் ஆக்ரோஷமாக கத்த, அந்த ஏழுபேரும் ராமசாமியை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். சரமாரியாய் வெட்டுக்கள்..... நொடிகளில் கழுத்துத் துண்டிக்கப்பட.... ராமசாமியின் தலை துள்ளிக்கொண்டு போய் தூரத்தில் விழுந்தது.
நடந்த கொலையைப் பார்த்த மேலத்தெரு வாசிகள் சிதறி ஓடத் துவங்கினார்கள்.
இவ்வளவு களேபரத்திலும் அந்த ஏழு பேரும் அசரவில்லை..... ராமசாமியின் பிணத்தை பார்த்தபடி அப்படியே நின்றார்கள். “ நமக்குள்ளே ஆயிரம் விரோதங்கள் இருக்கலாம்... ஆனால், நம்ம தோழன் ஒருத்தன் செத்துக் கிடக்கிறான். அவனுக்கு அஞ்சலி செலுத்துவோம்! " என்று கூட்டத்தில் முதன்மையாக இருந்த ஒருவன் சொல்ல, எல்லோரும் சில நிமிடங்கள் கண்களை மூடி அஞ்சலி செலுத்தினார்கள்.
“ சரி... இதுவரைக்கும் ராமசாமி வெச்சிருந்த வண்டி இனிமே நமக்குதான் சொந்தம். நம்ம ஆளுங்கள்ல யாருக்கு வண்டி கிடையாது? ” மௌனத்தை உடைத்த ஒருவன் அந்தக் கும்பலை ஊடுருவிப் பார்த்தான். பிறகு கூப்பிட்டான்.
“ டேய்! சேட்டு, விக்கிரமன்... ரெண்டு பேரும் வாங்க... "
இருவரும் முன்னால் வந்து நின்றார்கள். " இனிமே இந்த வண்டி உங்க ரெண்டு பேருக்கும் சொந்தம். ஆனா, அவன் வண்டியை ஓட்டறதால அவனை மாதிரி துரோகியா ஆயிடாதீங்க! ” - அட்வைஸ் செய்தபடி சாவியைக் கொடுத்தான்.
" எல்லோரும் கலையலாம்... பத்து நாளைக்கு சொந்தக்காரங்க வீடுகள்ல போய் தங்கிக்கோங்க. திரும்பவும் தகவல் கொடுத்துக் கூப்பிடற வரைக்கும் யாரும் இந்த முந்திரிக்காட்டு பக்கம் எட்டிப்பார்க்க வேண்டாம் ' தலைவன் உத்தரவு போட்டதும், ஆளுக்கொரு பக்கம் பைக்கை திருகிக் கொண்டு பறந்தார்கள். சேட்டும், விக்கிரமனும் ராமசாமியின் உடலருகே சரிந்து கிடந்த பைக்கை போய் நிமிர்த்தினார்கள். சாவியைப் போட்டு விக்கிரமன் உதைக்க ஸ்டார்ட் ஆனது பைக். சேட்டு பின்னால் உட்கார, அதை நகர்த்தி ஆண்டிமடம் ரோட்டில் நகர்ந்தான் விக்கிரமன்.
அரை மணி நேரத்துக்குள் தகவல் பரவிவிட, கீழ்குவாகத்திலிருந்து ராமசாமியின் மனைவி ராணியும், பங்காளிகளும் பதறி ஓடி வந்தார்கள். பல ஊர்களிலிருந்தும் பறந்து வந்த ராமசாமியின் ஆதரவாளர்கள் ஆக்ரோஷமாகி, இளவரசனையும் அவரது ஆட்களையும் தேடினார்கள். அவர்களில் யாருமே வல்லத்தில் இல்லை..... இன்னும் சிலர் வல்லத்தை ஒட்டிய முந்திரிக்காடுகளில் புகுந்து சல்லடை போடாத குறையாக தேடினார்கள். ஆனால், வெறுங்கையோடுதான் திரும்ப வேண்டியிருந்தது!
போலீஸ் வந்தது... எல்லா ஃபார்மாலிட்டிகளையும் முடித்துவிட்டு ராமசாமியின் உடலைத் திரும்பக் கொடுத்தது! அன்று இரவே ராமசாமி புதைக்கப்பட்டார். எல்லோரும் அழுது அரற்றிவிட்டுப் போய்விட, அந்த மண்மேட்டையே பார்த்தவாறு எஞ்சியிருந்தது எட்டுபேர்தான். கண்களில் வழியும் நீரைத் துடைத்தபடி ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
" இந்த கொடுமைக்கு கணக்கு தீர்க்கலைன்னா, நாம உயிரோட இருக்கறதுல அர்த்தம் இல்லை! ” ஆதிமூலம் அடித்தொண்டையில் கத்த, இருட்டிலும் மற்ற எல்லோரும் தலையசைப்பது தெளிவாக தெரிந்தது.
" பழிக்குப் பழி வாங்கணும் தோழர். இளவரசன், செல்வத்துல ஆரம்பிச்சி எல்லோரையும் வெட்டணும்... வெட்டி தலை வேறே... உடம்பு வேறேன்னு ஆக்கணும். அதுவரைக்கும் நாம தூங்கக் கூடாது. அவனுங்களை வெட்டிக் கொன்னுட்டு.... அந்த ரத்தம் படிஞ்ச அரிவாளைக் கொண்டுவந்து இதே சமாதியில தோழர் ராமசாமி பக்கத்துல வெச்சுப் புதைக்கணும். புதைச்சே தீரணும்! " இளம்வயதுக்காரன் ஒருவன் சத்தமாக பேசியபடி அழ, அவனை ஆதிமூலம் அப்படியே கட்டிக் கொண்டார்.
" இனிமே நாம அழக்கூடாது... அவனுங்களை அழவிட்டு அந்தக் கண்ணீரைப் பார்த்து சிரிக்கணும் " ஆதிமூலம் அவன் கண்களைத் துடைத்துவிட்டார்.
" முதல்ல அந்த சின்னப்பசங்களை வெட்டிப்போடணும். சேட்டும், விக்கிரமனும்தான் தோழர் ராமசாமியோட வண்டியை வெச்சிருக்காங்க. ஸ்ரீமுஷ்ணம் பக்கத்துல தண்டகாரன் குப்பத்துல அவங்க சொந்தக்காரங்க வீடு இருக்கு.... அவனுங்க அங்கேதான் போயிருக்கணும்... நாளைக்கே அங்கே போறோம். அவனுங்களைத் தேடிப் பிடிச்சுப் பலியிடறோம். இந்த எல்லா நடவடிக்கைகளுக்கும் இனிமே நமக்கு ஆதிமூலமே தலைவரா இருக்கணும் " விழுப்பனங்குறிச்சி சின்னத்தம்பி சொல்ல, ஆதிமூலம் தன் அரிவாளை கெத்தாகத் தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்து அதை ஏற்றுக் கொண்டார். மற்ற எல்லோரும் வலது கை முஷ்டியை உயர்த்தி, " தோழர் ராமசாமி வழி நடப்போம்! " என்று கோஷமிட்டனர்.
மறுநாள் காலை பதினோரு மணி... தண்டகாரன் குப்பம் ஊருக்குள் போகாமல், மெயின் ரோட்டிலேயே நின்றிருந்தன, அந்த நான்கு பைக்குகளும். ஆதிமூலத்துடன் ஏழுபேரும் மௌனமாக காத்திருந்தார்கள். ஆண்டிமடத்திலிருந்து வரும் ரோடு இவர்கள் நிற்குமிடத்துக்கு கொஞ்சம் முன்புதான் வளைகிறது. வேகமாக வந்து அந்த வளைவில் திரும்பிவிட்டு, இவர்களைப் பார்த்தும் யாரும் அவசரமாக திரும்பித் தப்பிவிட முடியாது. ஆரவாரமில்லாத ரோடு... எப்போதாவது ஒரு டிராக்டர், செம்மண் ஏற்றிவரும் லாரி வந்து வளைந்து இவர்களருகே தயங்கிக் கடந்து போனது.
பக்கத்து நிலத்தில் நான்கு ஆண்களும், சில பெண்களும் ஏர் பூட்டி கம்பு விதைத்துக் கொண்டிருந்தார்கள். ரொம்ப நேரமாக இவர்கள் நிற்பதைப் பார்த்து சந்தேகப்பட்டு ஒரு பெரியவர், " எதுக்காக தம்பி நிற்கறீங்க? " என்று கேட்டார்.
" கூடவந்த ரெண்டு பயலுங்க பின்தங்கிட்டானுங்க.... அவனுங்க வரட்டும்னு காத்திருக்கோம். " - ஆதிமூலம் பதில் சொல்ல. அதோடு அமைதியாகி அவர்கள் பாட்டுக்கு வேலையைப் பார்த்தார்கள்.
வயலையும் இவர்களையும் ஒரு சின்ன முள்வேலி மறைத்தது. அதனால் இவர்களால் ரோட்டில் யார் வந்தாலும், அவர்கள் வளைவைத் திரும்பிய பிறகுதான் அடையாளம் காண முடியும். அதேசமயம் அந்த வயலில் வேலை செய்பவர்களுக்கோ ஆண்டிமடம் ரோடு தெளிவாகத் தெரிந்தது.
ராத்திரி முழுக்க கொடுக்கூர் முந்திரிக்காட்டில் பதுங்கியிருந்துவிட்டு அதிகாலை ஆரவாரங்கள் அடங்கி வெயில் உச்சிக்கு ஏறின பிறகு கிளம்பிய சேட்டும், விக்கிரமனும் அந்த ரோட்டில்தான் வந்தார்கள். பிரச்னையில்லாமல் பெரம்பலூர் மாவட்ட எல்லையைத் தாண்டிவிட்ட பிறகு, வண்டி வேகமெடுத்தது. புது பைக் ஓட்டுகிற உற்சாகத்தில் சத்தமாகப் பேசிக் கூச்சலிட்டவாறே வந்தார்கள்.
வயலில் ஏர் ஓட்டிக் கொண்டிருந்த பெரியவர் கண்ணில்தான் அந்த பைக் முதலில் தென்பட்டது. உற்சாகமாக ஆதிமூலத்தை நோக்கிக் குரல் கொடுத்தார். " தம்பி! ஒரு மோட்டார் சைக்கிள் வேகமா வருது... உன் கூட்டாளிங்கதானா பாரு! "
இவர்கள் விடைத்துக்கொண்டு தயாரானார்கள்.
சில நொடிகளில் தங்கள் தலைகள் மண்ணில் உருளப்போவது தெரியாமல், சேட்டும் விக்கிரமனும் சீறிக்கொண்டு வளைவில் திரும்பினார்கள்.
- மேலும் சலசலக்கும்...!