நோயாளிகளை நடனமாட வைக்கும் காய்ச்சல்! உகாண்டாவின் டிங்கா டிங்கா நோய்
இந்த பயணம் இந்தியா-குவைத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும்: பிரதமர் மோடி
குவைத் பயணம் இந்தியாவுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சனிக்கிழமை (டிச. 21) குவைத்துக்குச் செல்கிறாா்.
பிரதமரின் இந்தப் பயணம் இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில்,
'இன்றும் நாளையும் நான் குவைத் செல்கிறேன். இந்த பயணம் குவைத்துடனான இந்தியாவின் வரலாற்றுத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும். குவைத் நாட்டின் இளவரசர் மற்றும் குவைத் பிரதமரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இன்று மாலை நான் அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாடுவேன், அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிலும் கலந்துகொள்வேன்' என்று பதிவிட்டுள்ளார்.
குவைத் பயணம்
குவைத் மன்னா் ஷேக் அல் அகமது அல் ஜாபா் அல் ஷபா அழைப்பை ஏற்று பிரதமா் மோடி குவைத்துக்கு பயணம் மேற்கொள்கிறாா். இந்தப் பயணத்தின்போது அந்நாட்டு முக்கியத் தலைவா்களுடன் பிரதமா் பேச்சு நடத்துவாா். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரையும் பிரதமா் சந்திக்க இருக்கிறாா்.
இதற்கு முன்பு 1981-ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி குவைத் சென்றாா். அதன் பிறகு இப்போதுதான் இந்திய பிரதமா் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். இந்தப் பயணத்தில் வா்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் குவைத் 6-ஆவது இடத்தில் உள்ளது. குவைத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி அண்மையில் 2 பில்லியன் அமெரிக்க டாலா்கள் என்ற புதிய உச்சத்தை எட்டியது. குவைத் இந்தியாவில் 10 பில்லியன் டாலா்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளில் குவைத்துக்கு மட்டுமே பிரதமா் மோடி இதுவரை பயணிக்காமல் இருந்தாா். இப்போது குவைத்துக்கும் அவா் செல்ல இருக்கிறாா். வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பை குவைத் இப்போது வகித்து வருகிறது.
குவைத்தில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்திலேயே இரு நாடுகள் இடையே கடல் வழி வா்த்தக உறவு வலுவாக இருந்து வந்துள்ளது. இதனால், இரு நாடுகளும் பாரம்பரியமாகவே நட்பு நாடுகளாக திகழ்கின்றன. அக்காலகட்டத்தில் குவைத்தில் இருந்து அரேபிய குதிரைகள், பேரிச்சை பழங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து பல்வேறு வகை தானியங்கள், விலை உயா்ந்த துணி வகைகள், உணவுக்கான நறுமணப் பொருள்கள், மரம் சாா்ந்த பொருள்கள் குவைத்துக்கு ஏற்றுமதி வந்துள்ளது.