மும்பை: இனப் பிரச்னையை உருவாக்கிய அகர்பத்தி புகை; மராத்தி குடும்பத்தை தாக்கிய வடமாநில குடும்பம்!
மும்பையில் மராத்தியர்களை விட மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இதனால் மராத்தியர்களுக்கும், மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. சில இடங்களில் குடியிருப்பு கட்டடங்களில் மராத்தியர்களுக்கு வீடு கொடுக்கப்படமாட்டாது என்று அறிவிப்பு பலகை கூட வைத்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. மும்பை அருகில் உள்ள கல்யான் என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் அகர்பத்தி கொளுத்திய விவகாரம் மராத்தி மற்றும் வடமாநிலத்தவர் சண்டையாக மாறி இருக்கிறது. கல்யானில் உள்ள அஜ்மேரா ஹைட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தீரஜ் தேஷ்முக். இவரது மனைவி கீதா வீட்டிற்கு வெளியில் இருந்த பொதுவான இடத்தில் அகர்பத்தியை கொளுத்தி வைத்துள்ளார். அதிலிருந்து வந்த புகை பக்கத்து வீட்டில் வசிக்கும் அகிலேஷ் சுக்லா குடும்பத்திற்கு அசெளகரியமாக அமைந்தது.
உடனே அகிலேஷ் சுக்லா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே சுக்லா குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்தனர். அவர்கள் மராத்தியர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததாக தெரிகிறது. தீரஜ் சகோதரர் அபிஜித் அருகில் வசித்து வந்தார். அவரும் ஓடி வந்தார். சுக்லாவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் ஒன்று சேர்ந்து தீரஜ் மற்றும் அபிஜித்தை அடித்து உதைத்தனர். இதில் அபிஜித் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சண்டையை யாரோ தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்தனர். இது வைரலானது. சுக்லா குடும்பம் மராத்தியர்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காயம் அடைந்த அபிஜித் உடனே மும்பையில் உள்ள சயான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். வீடியோ வைரலானதால் அகிலேஷ் சுக்லா தானாக முன்வந்து போலீஸில் சரணடைந்துள்ளார். இது தவிர போலீஸார் மேலும் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.
இது குறித்து தீரஜ் தேஷ்முக் கூறுகையில், ``அகிலேஷும், அவரது மனைவியும் மராத்தியர்கள் குறித்து விமர்சனம் செய்தபோது நான் எதிர்ப்பு தெரிவித்தேன். உடனே அவர்கள் கோபமடைந்து வாக்குவாதம் செய்தனர். அதன் பிறகு நாங்கள் எங்களது வீட்டிற்குள் சென்றுவிட்டோம். ஆனால் சிறிது நேரத்தில் கட்டடத்திற்கு வெளியில் இருந்து வந்த பத்து பேர் எங்களது வீட்டுக்கதவை தட்டினர். அவர்கள் எங்களை வீட்டிற்கு வெளியில் வரவைத்து தாக்கினர். இதில் எனது சகோதரர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சுக்லா தனது சட்டை பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து மிரட்டினார். சுக்லா தலைமை செயலகத்தில் பணியாற்றுவதால் கட்டடத்தில் வசிக்கும் மற்றவர்களுடனும் மோசமாக நடந்து கொள்வார். நான் முதலில் போலீஸில் புகார் செய்தபோது அவர்கள் புகாரை பதிவு செய்யவில்லை. அதன் பிறகே இது குறித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டேன்'' என்றார்.
இச்சம்பவம் மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. மராத்தியர்களுக்கு சொந்த மண்ணில் பாதுகாப்பு இல்லை என்று உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
உடனே இதற்கு பதிலளித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மராத்தி குடும்பத்தை தாக்கிய அகிலேஷ் சுக்லா அரசு பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்றும், மராத்தியர்களுக்கு எதிரான எந்தவிதமான தாக்குதலையும் அரசு பொறுத்துக்கொள்ளாது தெரிவித்தார். இது குறித்து அகிலேஷ் சுக்லா கூறுகையில், ``மராத்தியர்களுக்கு எதிராக நான் எதையும் பேசவில்லை. எங்களுக்குள் தனிப்பட்ட முன்விரோதம் இருந்தது" என்று குறிப்பிட்டார்.
சுக்லா தனது காரில் ஊதா கலர் சுழல் விளக்கு பயன்படுத்தி வருகிறார். அந்த வகையான சுழல் விளக்கை பயன்படுத்தியதற்காக சுக்லாவிற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் 9500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். சுக்லா தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு காரில் சுழல் விளக்கை பயன்படுத்தி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சுக்லா காரில் சுழல் விளக்கு பயன்படுத்த தகுதி இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று துணை போலீஸ் கமிஷனர் அதுல் தெரிவித்தார். சாதாரண அகர்பத்தி புகை இரு சமுதாய சண்டையாக மாறிவிட்டது.