எலான் எனும் எந்திரன் 10: `அந்தர்பல்டி, புரிந்து கொள்ள முடியாத முரண்’ - இது தான் மஸ்க் அரசியல்
``நான் ஒரு மிதவாதி, எனக்கு எந்த அரசியல் சார்பும் கிடையாது, மனித இனத்தைக் காப்பாற்ற நாம் செவ்வாயில் குடியேற வேண்டும், ஏஐ - காலநிலை மாற்றத்தை விட பிறப்பு எண்ணிக்கை குறைவது மனித இனத்துக்கே ஆபத்து…” - இப்படி அறிவியல் வணிகம் பக்கம் மட்டுமே பேசிக் கொண்டிருந்த எலான் மஸ்க் திடீரென அரசியல் பிரவேசம் செய்தார்.
தொடக்கத்தில் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் ஆகியோரை ஆதரித்துக் கொண்டிருந்தார் எலான் மஸ்க். கடந்த 2022 காலத்தில், டொனால்ட் ட்ரம்புக்கு வயதாகிவிட்டது, அவர் மெல்ல அரசியலிலிருந்து விலகுவது நல்லதெனக் கூறினார்.
ட்ரம்பின் வெறுப்புப் பேச்சால், கடந்த 2021 ஜனவரியில், ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க கேப்பிடல் கட்டடத்தை முற்றுகையிட்டு சூறையாடினர். அது அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே மிக மோசமான கரும்புள்ளி. அமெரிக்க ஜனநாயகத்தின் மனசாட்சியை உலுக்கிய அவல நிகழ்வு. அதை அரங்கேற்றியது சாட்சாத் ட்ரம்ப் தான். அப்பேற்பட்ட ட்ரம்ப் தான் அமெரிக்க ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியுமெனப் பேசினார் எலான் மஸ்க். அரசியல்வாதிகளை விட எலான் மஸ்க் அடித்த இந்த அந்தர்பல்டியை விமர்சிக்க வார்த்தைகளே இல்லை.
கடுமையான இமிக்ரேஷன் சட்டங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்கா & பல்வேறு ஐரோப்பிய நாடுகளுடன் முரண்பட்ட அதே எலான் மஸ்க் தான், இமிக்ரேஷன் சட்டங்களில் அதிதீவிரமாக இருக்கும் ட்ரம்பை ஆதரிக்கிறார். எலான் மஸ்கும் தென்னாப்பிரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வெளிநாட்டவர் தான் என்பதால், இந்த விஷயத்தில் ட்ரம்புக்கு அவர் வழங்கும் ஆதரவு, புரிந்து கொள்ள முடியாத முரணாகத் தொக்கி நிற்கிறது.
உலக அளவில் எந்த ஒரு பில்லியனரும் எலான் மஸ்க் அளவுக்கு தங்கள் நாட்டின் அரசியலில் நேரடியாக தலையிட்டதில்லை, தனக்குப் பிடித்த வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்ததில்லை, தேர்தல் பிரசாரங்களில் பங்கெடுத்ததில்லை. ஆனால் மேற்கூறிய அனைத்தையும் டொனால்ட் ட்ரம்புக்காகச் வெளிப்படையாகச் செய்தார் எலான் மஸ்க். கிட்டத்தட்ட 2024 அமெரிக்க அதிபர் தேர்தலை, ஏதோ தனக்கான தேர்தல் போல பல்வேறு தளங்களில் ட்ரம்புக்கு ஆதரவாக களமிறங்கி பிரசாரம் செய்தார்.
மறுபக்கம், அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, ட்ரம்பை ஆதரிக்கும் வகையில் சுமார் $270 மில்லியன் நிதியை நன்கொடையாகக் கொடுத்தார். இதற்கு முந்தைய தேர்தல்களில் எலான் மஸ்க், ஜனநாயகக் கட்சி & குடியரசுக் கட்சி என இரு கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
இத்தனைக்குப் பிறகும் எலான் மஸ்க், தன்னை மிதவாதி என்றே அழைத்துக் கொள்கிறார், ஒரு பழிமைவாதி என தன் மீது வைக்கப்படும் பதத்தை அவர் ஏற்றுக் கொள்வதில்லை.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எலான் மஸ்க் ஏன் ட்ரம்பை ஆதரிக்கிறார்?
எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் எத்தகைய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார், நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். அதே போல, மனித இனத்தை பல்வேறு கோள்களில் வாழும் இனமாக மாற்ற வேண்டும் என்பதிலும் அவர் காட்டும் ஆர்வத்தைப் பல்வேறு தருணங்களில் பார்க்க முடிகிறது.
ஏற்கனவே அமெரிக்காவில் அதிக அரசு கெடுபுடிகள் இருப்பதாகவும், அது கண்டுபிடிப்புகளுக்கு தடையாக இருப்பதாகவும் கூறி இருந்தார் எலான். அதோடு எக்ஸ் தளத்தில் “ட்ரம்புக்கு வாக்களிப்பது, செவ்வாய் கிரகத்துக்கு வாக்களிப்பதற்குச் சமம்” என பதிவிட்டிருந்தார். சுருக்கமாக, ஸ்பேஸ் எக்ஸ் திட்டங்களுக்கு அரசு தரப்பில் ஏற்படும் தாமதங்களையும் கெடுபிடிகளையும் தவிர்க்க, தனக்குத் தகுந்தாற் போல் சட்டங்களை மாற்றியமைத்துக் கொள்ள அல்லது வளைத்துக் கொள்ள விரும்புகிறார் எலான்.
ஸ்பேஸ் எக்ஸுக்கு நிறைய நாசா ஒப்பந்தங்கள், ஸ்டார்லிங்குக்கு நிறைய ராணுவ & அமெரிக்க அரசு ஒப்பந்தங்கள், டெஸ்லாவுக்கு அதிக ஊக்கத் தொகை, தன் எக்ஸ் தளம் அரசியல் காரணங்களால் வீழ்த்தப்படாமல் இருப்பது… போன்ற பல வணிக நோக்கங்களுக்காக எலான் மஸ்க், டொனால்ட் ட்ரம்பை ஆதரிப்பதாக வெஞ்சர் கேப்பிட்டலிஸ்ட் & அரசியல் வியூக வகுப்பாளர் பிராட்லி டஸ்க், யூரோ நியூஸ் நெக்ஸ்ட் தளத்திடம் கூறினார்.
எலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த காலத்திலிருந்து, பில்லியனர்கள் அதிகம் வரி செலுத்துவதைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். அமெரிக்க சட்ட திட்டங்கள் படி, ஒரு வரிச்சலுகைச் சட்டப் பிரிவின் கீழ் எலான் மஸ்க் வரிச் சலுகை பெற வாய்ப்பிருப்பதாகவும், டொனால் ட்ரம்ப் ஆட்சி அமைத்த பின், அச்சட்டப் பிரிவின் மூலம் பல பில்லியன் அமெரிக்க டாலர் வரிச் சலுகையை எலான் பெற வாய்ப்பிருப்பதாகவும் தி எகனாமிக் டைம்ஸ் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எலான் மஸ்கின் சொந்த மகளான விவியன் ஜென்னா வில்சன் (ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை) பிரச்னையை முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம். டொனால்ட் ட்ரம்போ டிரான்ஸ் சமூகத்தினருக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வருகிறார். இருவரும் இந்த விஷயத்தில் ஒத்துப் போவதும் எலான் மஸ்க் ட்ரம்பை ஆதரிக்க ஒரு முக்கிய காரணம்.
தொடக்கத்தில் சுதந்திரப் பேச்சுக்கு ஆதரவாக தன்னைக் காட்டிக் கொண்ட எலான் மஸ்க், எக்ஸ் தளத்தில் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் விஷயங்களைத் தளர்த்தினார். இது தீவிர வலது சாரி & பிரிவினைவாதக் கருத்துக்கள் எக்ஸ் தளத்தில் பரவ வழி வகுத்தது. ட்ரம்ப் உட்பட, முந்தைய ட்விட்டர் நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டிருந்த பலரையும் மீண்டும் எக்ஸ் தளத்தில் அனுமதித்தார்.
ஜனநாயகக் கட்சியினரை பிரிவினைவாதிகள் & வெறுப்புப் பிரச்சாரம் செய்பவர்கள் என விமர்சித்தார்.
2024 ஜூலையில் எலான் மஸ்க் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட, கமலா ஹாரிசை விமர்சிக்கும் வகையிலான காணொளி ஒன்றை தன் எக்ஸ் கணக்கில், அது உண்மையா பொய்யா, அது உருவாக்கப்பட்ட காணொளியா அல்லது உண்மையிலேயே கமலா ஹாரிஸ் அப்படிப் பேசினாரா என எதையும் குறிப்பிடாமல் பகிர்ந்து அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்பினார்
2024 ஆகஸ்டில் எலான் மஸ்க் & டொனால்ட் ட்ரம்ப் சுமார் சில நேரம் ஒரு லைவ் காணொளியில் பேசினர். அப்போது அரசு தரப்பில் ஒரு சிறப்புச் செயல்திறன் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும், அதில் தான் பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார்.
டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சித்ததைத் தொடர்ந்து, கமலா ஹாரிஸையோ, ஜோ பைடனையோ எவரும் கொலை செய்ய முயற்சிக்கவில்லை, அது விசித்திரமாக இருக்கிறது என எலான் மஸ்க் தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டு, அமெரிக்க அரசியலில் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பினார்.
பிளாக் லைவ்ஸ் மேட்டர் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில், ஆப்ரிக்க அமெரிக்க இளைஞர் கொல்லப்பட்டது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று போலிருக்கிறதெனக் கூறினார்.
இதை எல்லாம் விட மிக மோசமாக, ஜனநாயகக் கட்சியினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் நிறைய வெளிநாட்டுக்காரர்களை அமெரிக்காவுக்குள் இமிக்ரேஷன் என்கிற பெயரில் அழைத்து வருவதாகத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். மஸ்கும் பிறப்பால் அமெரிக்கர் அல்ல என்பது நினைவுகூரத்தக்கது.
எக்ஸ் ஒரு மோசமான ஊடகம், இனி நாங்கள் எக்ஸ் தளத்தில் எங்கள் செய்திகளைப் பதிவிடப் பொவதில்லை என சமீபத்தில் தி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு எக்ஸ் தளத்தை தன் பிரச்சார வாகனமாகக் பயன்படுத்தினார் எலான் மஸ்க்.
2024 அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் எதிர்பார்த்தது போலவே டொனால்ட் ட்ரம்ப் வென்றுவிட்டார். தற்போது அரசு செயல்திறன் துறை (Department of Government Efficiency) என்கிற பெயரில் ஒரு புது துறையே உருவாக்கி, விவேக் ராமசாமி உடன் எலான் மஸ்க் இணைந்து அத்துறையை நிர்வகிகப் போகிறார்.
அறிவியல் அறிஞர், தேர்ந்த வணிகர், ஒரு எக்ஸ்பெர்ட் மாஸ் சைக்காலஜிஸ்ட், அரசியல் கலைஞர் என தன் பன்முகத்தால் இந்த உலகுக்கு நன்மை தீமை என எல்லாவற்றையும் கலந்து கட்டி செய்திருக்கிறார், செய்து கொண்டிருக்கிறார். இவரது அடுத்த இலக்கு என்ன..? உண்மையிலேயே ஹைப்பர் லூப், செவ்வாயில் குடியேற்றம், ஆட்டோ பைலட் வாகனங்கள், ஏஐ எந்திரங்களைப் பின்னுக்கும் தள்ளும் வகையில் மனிதர்களை மேம்படுத்தும் நியூராலிங்க் போன்ற திட்டங்களை நிறைவேற்றுவாரா..? அதை நேர்மறையான விஷயங்களுக்கு பயன்படுத்துவாரா..? விடை தெரியவில்லை.
எலான் மஸ்க் எப்போது என்ன பேசுவார், யாருக்கு விசுவாசமாக இருப்பார், யாருக்காக இந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவார் என யாருக்கும் தெரியாது. நாம் எலான் மஸ்கைப் நேசிக்கலாம் வெறுக்கலாம், போற்றலாம் தூற்றலாம்… ஆனால் ஒருபோதும் உலக வரலாற்றிலிருந்து அவரை புறந்தள்ள முடியாத இடத்தில் இருக்கிறார் என்பதை மட்டும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.
நாம் எலானிடம் கேட்பதெல்லாம் ஒரே ஒரு கேள்வி தான்… நீங்கள் நல்லவரா, கெட்டவரா..?
வரலாறு எல்லா மனிதர்களையும் ஒரு வரியில் நினைவு கொள்ளும், சிலருக்கு பக்கங்களை வழங்கும், வெகு சிலருக்கு மட்டுமே அத்தியாயங்களை ஒதுக்கும். எலான் மஸ்குக்கு காலம் பக்கங்களை கொடுக்கப் போகிறதா அல்லது அத்தியாயங்களை ஒதுக்கப் போகிறதா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். காரணம் காலம் வலியது.
நிறைவுற்றது!