பிரசவத்தின்போது சேய், தாய் உயிரிழந்த சோகம் - அரசு மருத்துவமனையில் போலீஸ் விசாரணை
Wayanad: லாரி டிரைவரின் நல்ல மனசு, சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட இளைஞர்கள்; நெகிழ்ச்சி சம்பவம்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் இணையும் முச்சந்திப்பில் அமைந்திருக்கிறது நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம். அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகளைக் கொண்டிருக்கும் அழகிய வனத்திற்கு நடுவே தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேய்ச்சல், நீர்நிலைகள், இனப்பெருக்கம் உள்ளிட்ட தேவைகளுக்கு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலைகளைக் கடப்பது சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பகுதியில் பல சாலைகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வாகன இரைச்சலால் கோபமுறும் யானைகள் வாகனங்களை விரட்டுகின்றன.
இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் பைக்கில் மைசூரு நோக்கிப் பயணம் செய்துள்ளனர் . முத்தங்கா பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த யானை ஒன்று திடீரென இவர்களின் வாகனத்தை விரட்டியிருக்கிறது. இருவரும் நிலைதடுமாறி விழுந்துள்ளனர். பைக்குடன் கீழே விழுந்த இளைஞரைத் தாக்க யானை ஓடியிருக்கிறது. தக்க சமயத்தில் அந்த வழியாக சரக்கு லாரியில் வந்த ஓட்டுநர், சத்தமாக தொடர்ந்து ஹாரன் எழுப்பிக் கொண்டே வேகமாக லாரியை முன்னோக்கி இயக்கியிருக்கிறார்.
லாரியைக் கண்டு பயந்த யானை பின்வாங்கிய நிலையில், இளைஞர்கள் இருவரும் லாரியில் ஏறி உயிர் பிழைத்துள்ளனர். தக்க சமயத்தில் சாதுர்யமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய முகம் தெரியாத அந்த ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்து இளைஞர்கள் இருவரும் வீடியோ பதிவிட்டுள்ளனர். இளைஞர்களை யானையிடமிருந்து காப்பாற்றிய வீடியோ வெளியாகி லாரி டிரைவரை பாராட்டி வருகின்றனர்.