Gukesh: செஸ் சாம்பியன் குகேஷ்; வரவேற்று அழைத்துச் சென்ற உதயநிதி - பாராட்டு விழ...
'ஒரே நாடு ஒரே தேர்தல் அதிபர் ஆட்சிக்கு வழிவகுக்கும்' - கனிமொழி
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அதிபர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் பொருட்டு அதுதொடர்பான இரண்டு மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாக்களை தாக்கல் செய்தார்.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முதல் மசோதாவும், யூனியன் பிரதேசங்களுக்கும் அதேநேரத்தில் தேர்தல் நடத்த இரண்டாவது மசோதாவும் வழிவகை செய்யும்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இறுதியாக, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்தார்.
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் முதல்முறையாக மின்னணு முறையில் வாக்கெடுப்பு!
இந்நிலையில் தில்லியில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. கனிமொழி,
'நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்திருக்கிற ஒரு மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. அந்த மசோதாவை நிறைவேற்ற அவர்களிடம் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு னுப்புவதாக கூறியுள்ளார்கள்.
இந்த மசோதா அடிப்படையிலே அரசியலமைப்பு, மாநில உரிமைகளுக்கு, மக்களின் உரிமைகளுக்கு எதிரானது. மக்கள் தேர்வு செய்யக்கூடிய ஒரு மாநில அரசை கலைக்கும் உரிமையை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கக்கூடிய மசோதா. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
இதையும் படிக்க | மக்களவையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா தாக்கல்!
மாநில கட்சிகளை வலுவிழக்கச் செய்யும். அதிபர் ஆட்சிக்கு வழிவகுக்கும். இதனால் தேர்தல் செலவு குறையும் என்று கூறுகிறார்கள். ஆனால், மாநிலங்களில்கூட ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவதில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும்?
முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பக்கூட இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கலாம். ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை திமுக தொடர்ந்து எதிர்க்கும்' என்றார்.