பாக். வன்முறை: காயமடைந்தோருக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருந்துகள் விநியோகம்!
செஸ் உலகில் சிறந்த நகரம் சென்னை: குகேஷ்
இளம் வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளதாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் தெரிவித்துள்ளார்.
இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி. குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் இன்று (டிச. 17) பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் பேசியதாவது,
’’18 வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளேன். இது என்னுடைய நீண்ட நாள் கனவு. இளம் வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது.
செஸ் உலகில் சென்னை சிறந்த நகரமாக உள்ளது. இதில் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசின் உதவி அதில் முக்கியமானது.
2022 ஒலிம்பியாட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க செஸ் திருவிழா. மிகக் குறுகிய காலத்தில் செஸ் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி.
உலக சாம்பியன்ஷிப் பயணம் சென்னை கிராண்ட் மாஸ்டர்களின் துணையின்றி சாத்தியமாகியிருக்காது. நிதி உள்பட பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி.
செஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்குத் திரும்பினால், என்னை பாராட்டவும், நிதியுதவி அளித்து ஊக்குவிக்கவும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தயங்குவதில்லை.
என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னுடைய எதிர்காலத்தை வடிவமைத்துள்ளனர். என்னுடைய பெற்றோர், விஸ்வநாதன் ஆனந்த் என எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விஸ்வநாதன் ஆனந்த் விளையாட்டைப் பார்த்து செஸ் போட்டியின்மீது ஆர்வம் கொண்டவன் நான். அவர் மூலம் எனக்கு கிடைத்த பயிற்சியும், பயிற்சியாளர்களும் ஏராளம்.
என்னுடைய குழுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ என குகேஷ் பேசினார்.