ஹேலி மேத்யூ அதிரடி: மே.இ.தீவுகள் அபார வெற்றி!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி நவி மும்பையில் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹேலி மேத்யூ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 62 ரன்கள் விளாசி அவுட்டானார். அவரைத் தவிர்த்து விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
மேற்கிந்திய தீவுகள் அணித் தரப்பில் ஹென்ரி, டோட்டின், ஹேலி, ஃப்லெட்ஜர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் தொடக்க ஆட்டக்காரர் குயினா ஜோசப் 38 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹேலி மேத்யூ, விக்கெட் கீப்பர் ஷெமைன் உடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அதிரடியாக விளையாடிய ஹேலி 17 பவுண்டரிகளுடன் 85 ரன்களும் ஷெமைன் 29 ரன்களும் விளாசினர்.
மேற்கிந்திய தீவுகள் அணி 15.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது போட்டி வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி குஜராத் ரிலையன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.