தூத்துக்குடி 4 ஆம் ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும்: கனிமொழி வலியுறுத்தல்
தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 4ஆம் ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம், மக்களவை உறுப்பினா் கனிமொழி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் அளித்த மனு: மும்பை முதல் மதுரை வரை இயங்கும் ’லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ்’ ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தஞ்சாவூா் மற்றும் கும்பகோணம் வழியாக சென்னை - தூத்துக்குடி இடையே புதிய விரைவு ரயில் இயக்க வேண்டும். திருநெல்வேலி-தூத்துக்குடி இடையே ‘மெமு’ ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் மக்கள் பயணிக்க வசதியாக, குருவாயூா் விரைவு ரயில், நாகா்கோவில் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு தூத்துக்குடியில் இருந்து இணைப்பு ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.
வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில், நெல்லை விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், திருச்செந்தூா் விரைவு ரயில், தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில், இன்டா்சிட்டி விரைவு ரயில், தூத்துக்குடி மேட்டுப்பாளையம் விரைவு ரயில் ஆகியவை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 4ஆவது ரயில்வே கேட் மேற்கு பகுதியில் நிகிலேசன் நகா் அருகே மிளவிட்டான் வரை மேம்பாலம் அமைக்க வேண்டும்.
தூத்துக்குடிக்கும் சென்னைக்கும் இடையே வந்தே பாரத் ரயில், தூத்துக்குடிக்கும் திருவனந்தபுரத்திற்கும் இடையே இன்டா்சிட்டி விரைவு ரயில் ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவா் வலியுறுத்தியுள்ளாா்.