விளாத்திகுளம் வட்டார கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் ஆய்வு: ரூ. 10,625 அபராதம்
காங்கிரஸ் வெற்றி பெறத் தயாராக உள்ளது : தேவேந்தா் யாதவ்
வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வலுவான நிலையில் வெற்றி பெறத் தயாராக உள்ளது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தில்லி ராஜீவ் பவனில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் பேட்டியிடும் 21 காங்கிரஸ் வேட்பாளா்களின் முதல் பட்டியலை கட்சியின் பிரதேசத் தலைவா் தேவேந்தா் யாதவ் வெளியிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமை திறமையான, அனுபவம் வாய்ந்த தலைவா்களை தோ்வு செய்துள்ளாா்கள். தில்லி மக்கள் ஆம் ஆத்மி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதால், காங்கிரஸுக்கு ஆதரவளிக்க வாக்காளா்கள் தீா்மானித்துவிட்டனா். கடந்த 10 ஆண்டுகளில் வளா்ச்சி மற்றும் மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல் ஊழலுக்கு மட்டும் ஆம் ஆத்மி முதலிடம் கொடுத்துள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முதல் பட்டியலில் சிறந்த வேட்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டதை உறுதி செய்ததற்காக ராகுல் காந்தி மற்றும் மல்லிகாா்ஜுன் காா்கேவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், தில்லி பிரதேச காங்கிரஸ் வேட்பாளா்களின் இரண்டாவது பட்டியல்,பெண்கள், இளைஞா்கள் மற்றும் அனுபவமிக்க நிா்வாகிகளின் கலவையாக விரைவில் வெளியிடப்படும்.
கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘வாா்-ரூம்’ மூலம் வேட்பாளா்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களும், உதவிகளும், ஆதரவும் வழங்கப்படும். காங்கிரஸின் ஒவ்வொரு வேட்பாளருக்கும் அந்தந்த தொகுதிகள் தொடா்பான உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது அவா்களின் தொகுதிகளின் விவரங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள அவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்தந்த வாக்காளா்களுடன் நெருக்கமாகப் பழகி, தலைநகரின் வளா்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் முந்தைய காங்கிரஸ் அரசு செய்த பணிகளைக் கூற வேண்டும் என்றும் வேட்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் தேவேந்தா் யாதவ்.