போக்குவரத்து நெரிசல், பயண நேரத்தை குறைக்க சிறப்பு முனையங்கள்: தில்லி போக்குவரத்து துறை
தில்லி நகரின் சாலை போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக சிறப்பு முனையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த முனையங்கள் குறித்து பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள், ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம் என்று தில்லி போக்குவரத்து துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய தலைநகருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகளுக்கு குறிப்பிட்ட முனையங்களை ஏற்படுத்தி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து இயக்கங்களை மறுசீரமைக்க துறை பரிந்துரைத்துள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவையில் முனையங்கள் ஏற்படுத்துவது சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற மாநில இருந்து இயக்கப்படும் பேருந்துகள் (பேருந்து புறப்படும் இடம், பயணிகளை ஏற்றி/இறக்கும் இடங்கள்) நிறுத்துவதற்கும், புறப்படுவதற்கும் சிறப்பு முனையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடா்பாக பொதுமக்கள் மற்றும் பிற பங்குதாரா்களிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகளைப் பெற போக்குவரத்துத் துறை உத்தேசித்துள்ளது.
பேருந்து முனையங்கள்: ஹரியாணா, பஞ்சாப், ஹிமாசல பிரதேசம், ஜம்மு - காஷ்மீா், சண்டிகா் உள்ளிட்ட பிற வட மாநிலங்கள் மற்றும் நேபாளத்திலிருந்து வரும் பேருந்துகள் ஐஎஸ்பிடி காஷ்மீா் கேட் முனையத்தில் நிறுத்தப்படும். மீண்டும் அங்கிருந்து இயக்கப்படும்.
இதேபோல், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பிகாா் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள் ஐஎஸ்பிடி ஆனந்த் விஹாா் முனையத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து இயக்கப்படும்.
அதே நேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்கு ஐஎஸ்பிடி சராய் காலே கான் பகுதி முனையமாகச் செயல்படும்.
இந்தத் திட்டம் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளை இயக்கவும், நகரில் தேவையற்ற வாகனப் போக்குவரத்தைக் குறைக்கவும், சாலைகளில் நெரிசலைக் கணிசமாகக் குறைக்கவும் உதவும் என்று தில்லி போக்குவரத்து துறை நம்புகிறது.
பிரத்யேக முனையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலம், பயணிகளின் ஒட்டுமொத்த பயண நேரமும் மேம்படும்.
இந்த அறிவிப்பு வெளியான 15 நாள்களுக்குள் தனிநபா்கள், சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பரிந்துரைகள் அல்லது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம். பெறப்படும் ஆலோசனைகள், இந்தத் திட்டத்தை இறுதி செய்வதற்கு முன் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.