அம்பேத்கரை அவமதித்த அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்! ராகுல்காந்தி பதிலடி!
அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்.
அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாரதிய ஜனதா கட்சி மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.
இதனை கண்டித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்னையாகத்தான் தெரிவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் ஷா கூறுகையில், “இந்தக் கருத்துகள் மிகவும் அருவருப்பானது. அம்பேத்கர் மீது பாஜக-ஆர்எஸ்எஸ் கொண்டுள்ள வெறுப்பை இது காட்டுகிறது. மக்கள் அவர்களுக்கு பாடம் கற்பித்துவிட்டதால், தற்போது அம்பேத்கர் பெயரைக் கூறுபவர்கள் மீது எரிச்சல் அடைந்துள்ளனர். இது வெட்கக்கேடானது. இதற்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
மல்லிகார்ஜுன கார்கேவின் பதிவில், “உள்துறை அமைச்சர் அம்பேத்கரை அவமதித்ததன் மூலம், பாஜக-ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானது. அவர்களின் முன்னோர்கள் அசோக் சக்ராவை எதிர்த்தார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களுக்கு, அம்பேத்கர் கடவுளைவிடவும் குறைவானவர் இல்லை. தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஏழைகளின் தூதுவர் அம்பேத்கர் என்பதை பிரதமர் நரேந்திர மோடி அரசின் அமைச்சர்கள் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.