சென்னை, புறநகரில் மழைக்கு பகல் 1 வரை வாய்ப்பு!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவியது. இது, அடுத்த இரு தினங்களில் வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதியை நோக்கி மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதனால், வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை
மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதன்கிழமை ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும், விழுப்புரம், கடலூா் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பகல் 1 மணிவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.