நான் இந்தத் தொடரில் தேவைப்படாவிட்டால் விலகிக் கொள்கிறேன்: அஸ்வின்
தன் முகத்திரையை தானே கிழித்துக்கொண்டார் அமித் ஷா: திருமாவளவன்
சென்னை: மக்களவையில் அம்பேத்கர் குறித்துப் பேசியதன் மூலம், தனது முகத்திரையை தானே கிழித்துக்கொண்டுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியிருக்கிறார்.
அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அது தொடர்பான விவாதம் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது.
அதன் நிறைவாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றரை மணி நேரம் பேசியிருந்த உரை கடும் பேசுபொருளாகி, இன்று நாடு முழுவதும் அமித் ஷாவின் பேச்சுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கருத்துப் பகிர்ந்திருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிராக விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?
எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.
அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம்.
சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள்.
புரட்சியாளர் அம்பேத்கர் "விசுவரூபம் " எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும் என்று மிகவும் காட்டமாக பகிர்ந்துள்ளார்.