`ஆட்டோ ஓட்டுவதை தொழிலாக கொண்ட என்னால்...’ - பரிசுத்தொகை குறித்து காசிமா தந்தை சொல்வதென்ன?
இளம் கேரம் வீராங்கனை, அரசுப்பள்ளி மாணவி, ஆட்டோ ஓட்டுநரின் மகள் என எளிமையான பின்புலம் கொண்டவர் காசிமா. 17 வயதில் 6வது உலகப்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் தனிநபர், இரட்டையர் மற்றும் குழுப் பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அவருடன் பங்கேற்ற மற்ற கேரம் வீராங்கனைகளான நாகஜோதி மற்றும் மித்ராவும் தங்கம், வெள்ளி வென்று பெருமை சேர்த்தனர். ஆனால் எளிய பின்னணியைச் கொண்ட கேரம் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு நேற்று வரை எந்த நிதி உதவியும் அறிவிக்கவில்லை என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் இன்று துணை முதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், காசிமாவை அழைத்து ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளார். இது குறித்து காசிமாவின் அப்பா மாபூ பாஷாவிடம் பேசினோம்.
" அமெரிக்காவில் நடந்த உலகக்கோப்பை போட்டிக்கு தமிழ்நாட்டிலிருந்து காசிமா, மித்ரா, நாகஜோதின்னு மூணு வீராங்கனைகள், பயிற்சியாளர் மரிய இருதயம் என 4 பேர் அமெரிக்காவுக்குப் போனாங்க. அதற்கான போக்குவரத்து செலவுக்கு தலா, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என 6 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி அனுப்பி வைத்தார். இவர்களும் சிறப்பாக விளையாடி தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தனர். காசிமாவை அழைத்து பாராட்டிய அமைச்சர் பரிசுத்தொகை அறிவிப்பதாக சொல்லியிருந்தார்.
இவை ஒரு புறம் இருக்க செஸ் உலகப்கோப்பையில் சாம்பியன் ஷிப் பட்டம் வென்று தமிழகம் திரும்பிய குகேஷிற்கு தமிழக அரசு உடனடியாக பரிசுத்தொகை அறிவித்தது. ஆனால் கேரம் குழுவினற்கு ஒரு மாதம் ஆகியும் பரிசுத்தொகையை அறிவிக்காதது சிறிய வருத்தமாக இருந்தது. பொது இடங்களிலும் அரசு பாரபட்சம் பார்ப்பதாக வதந்திகள் எழுந்தது. சில ஊடகங்களிலும் செய்தி வெளியாகியது. அரசாங்கத்தில் கேட்ட போது, பரிசுத்தொகை அறிவிப்பது முன்னெடுப்புகளில் இருப்பதாக தெரிவித்தனர். நேற்று விளையாட்டுத் துறையில் இருந்து எங்களைத் தொடர்பு கொண்டார்கள். இன்று பரிசுத்தொகை வழங்க இருப்பதாக தெரிவித்தனர்.
நானும் காசிமாவும் இன்று காலை 10. 30 மணியளவில் விளையாட்டுத்துறை அமைச்சரை அவரின் அலுவலகத்தில் சந்தித்தோம். காசிமாவிற்கு பரிசுத் தொகை ஒரு கோடி ரூபாயை அமைச்சர் வழங்கினார். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆட்டோ ஓட்டுவதை தொழிலாக கொண்ட என்னால் தொடர்ந்து காசிமாவை அடுத்தடுத்த போட்டிகளுக்கு அழைத்துச்செல்ல பணம் தான் பிரதான சிக்கலாக இருந்தது. இனி அது பற்றிய கவலையில்லை. பணத்தை பெற்றுக் கொண்டு ஆட்டோவில் சென்று கொண்டு இருக்கிறோம். இந்த தொகை காசிமாவின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் எங்கள் பட்டறையில் கேரம் பயிலும் பல குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும். அரசாங்கத்திற்கு நன்றி" என்று தெரிவித்தார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...