கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள்: சீமான்
எப்போதும் கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள் என்று அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள் விவாதத்தின் முடிவில், மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்' என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் அமித் ஷா பேச்சுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”‘அம்பேத்கர்! அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ‘பேஷன்’ ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும்” என்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இதையும் படிக்க: 'சிலருக்கு அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்' - அமித் ஷாவுக்கு விஜய் கண்டனம்!
உயிரோடு இருக்கும்போது சோறு தராத கடவுள், செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்? சொர்க்கம் இருக்கிறதா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது.
ஆனால் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சொன்னால் வாழும் பூமியையே சொர்க்கமாக மாற்ற முடியும். அதற்காக வாழ்ந்து வழிகாட்டிய பெருந்தகை அண்ணல் அம்பேத்கர்.
“அழகும், நிறைவும் கொண்ட வாழ்க்கையை சொர்க்கத்தில் அல்லாது நாம் வாழ்கிற பூமியில் படைக்கப் பாடுபடுகிறேன்” என்றார் பொதுவுடமைத் தத்துவத்தின் பிதாமகன் எங்கள் தாத்தா ஜீவானந்தம். அப்படியொரு சொர்க்கத்தில் எப்படியெல்லாம் வாழலாம் என்று சொல்லி வைத்தார்களோ, அப்படியெல்லாம் இப்போது வாழுகின்ற பூமியிலேயே தன் மக்களை வாழ வைக்க அரும்பாடாற்றியவர் அண்ணல் அம்பேத்கர்.
“எப்போதும் கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள். அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரித்தவர்தான் அங்கு வென்றார், இப்பொழுது சொல்லுங்கள் நாங்கள் யார் பெயரை உச்சரிக்க?” என்று குறிப்பிட்டுள்ளார்.