Ambedkar: `அம்பேத்கர் எனக்கு கடவுள்... அமித் ஷா தவறாக எதுவும் பேசவில்லை' - அண்ணாமலை
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்." என்று காங்கிரஸைச் சாடியது அரசியலில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``மனுஸ்மிருதியை நம்புபவர்கள் கண்டிப்பாக அம்பேத்கருடன் முரண்படுவதில் ஆச்சர்யமில்லை." என எதிர்வினையாற்றினார்.
இதில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வைச் சாடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ``அமித் ஷா தவறாக எதுவும் பேசவில்லை. அம்பேத்கர் பெயரை நீங்கள் அரசியல் லாபத்துக்காகத் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். `நீங்கள் உண்மையாகவே அம்பேத்கரியவாதிகளாக இருக்கிறீர்களா என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.' என்று அவருக்குரிய பாணியில் பேசியிருக்கிறார். எதிர்க்கட்சியினர் அதில் ஓரிரு வார்த்தைகளை எடுத்துக்கொண்டு தேவையில்லாத விவாதப் பொருளாக்குகின்றனர்.
முருகப் பெருமானைப்போல அம்பேத்கரையும் நான் கடவுளாகப் பார்க்கிறேன். அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு நான் அரசியல் செய்கிறேன். ஆனால், அம்பேத்கரின் பெயரை உச்சரிக்கின்ற எல்லா கட்சிகளும் அதைச் செய்கின்றனவா என்ற கேள்வியை முன்வைக்கிறேன். அம்பேத்கர் ஏன் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தார்கள். முதல் தேர்தலில் தெற்கு மும்பையில் எப்படி அம்பேத்கரைத் தோற்கடித்தார்கள் (காங்கிரஸ்).
அம்பேத்கருக்குப் பாரத ரத்னா விருதை எதற்காக 1980-ல் தாமதமாகக் கொடுத்தீர்கள். இவை அனைத்துக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும். அதைச் சொன்னீர்கள் என்றால், அம்பேத்கருக்கு நீங்கள் கௌரவம் அளித்திருக்கிறீர்கள் என்று ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இது எதுவுமே செய்யாமல், இன்றைக்கு அம்பேத்கரைப் பற்றி அமித் ஷா பேசிவிட்டார் எனத் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். உண்மையில் அம்பேத்கரின் பாதையில் நடக்கக்கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோடி தான்." என்று கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...