தமிழகத்தில் ரூ.40 கோடியில் நவீன தொழில்நுட்ப மையங்கள் திறந்து வைப்பு!
Ambedkar: "சங்பரிவார்கள் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள்" - திருமா
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் பெயரை முன்வைத்து காங்கிரஸை சாடியிருப்பது அரசியல் அரங்கில் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது. ``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரைக் காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சிதான். ஆனால், அவரின் உண்மையான உணர்வுகள் குறித்தும் பேச வேண்டும்." என நேற்று அமித் ஷா பேசியிருந்தார்.
அமித் ஷாவின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து, ``டாக்டர் அம்பேத்கரின் லெகஸியை அழிக்கவும், SC/ST சமூகங்களை அவமானப்படுத்தவும், ஒற்றை வம்சத்தின் தலைமையில் ஒரு கட்சி எப்படி எல்லாவிதமான கேடுகெட்ட செயல்களிலும் ஈடுபட்டது என்பதை இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறார்கள்." என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
இதற்கு, கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர். இந்த நிலையில், வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், ``புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படிப் பொறுத்துக் கொள்ளமுடியும்?
எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம். அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம்.
சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள். புரட்சியாளர் அம்பேத்கர் "விசுவரூபம் " எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்!" என்று பா.ஜ.க-வை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...