Ambedkar: ``எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை..!" - அமித் ஷாவை சாடிய விஜய்
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது, ``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்." எனக் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தேசியளவில் பெரும் விவாதமானது. ராகுல் காந்தி முதல் தமிழ்நாட்டின் முதல்வர் வரை கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின், `` அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டப் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். அதன் தொடராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர்... அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.