மும்பை: 85 பேருடன் சென்ற படகு விபத்துக்குள்ளானது! மாயமானோரை தேடும் பணி தீவிரம்
``மகளுக்கு 1 கோடி பரிசு; தமிழ்நாடு அரசுக்கு நன்றி"- நெகிழும் காசிமாவின் அப்பா
"கேரமில் மூன்று தங்கப்பதக்கம் வென்ற என் மகள் காசிமாவை ஊக்கப்படுத்தும் விதமாக 1 கோடி ரூபாய் பரிசு வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஆனந்த விகடனுக்கும் நன்றி!" - மகிழ்ச்சி பெருக்கோடு பேசுகிறார், ஆட்டோ ஓட்டுநரும் கேரம் விளையாட்டு வீரர் காசிமாவின் தந்தையுமான மெஹ்பூப் பாஷா.
"எங்கக் குடும்பமே இப்போ எல்லையில்லாத ஆனந்தத்துலதான் இருக்கோம்னு சொல்லணும். ஏன்னா, நான் சாதாரண ஆட்டோ டிரைவர். இவ்ளோ பெரிய தொகையை பரிசா கொடுப்பாங்கன்னு கொஞ்சம்கூட எதிர்ப்பார்க்கல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் பொண்ணு காசிமா மாதிரியே கேரம் உலகக்கோப்பை போட்டியில நாகஜோதி, மித்ரான்னு மூணு பேரோட குடும்பமும் இன்னைக்கு உதயநிதி சாரை மீட் பண்ணினோம். 'நீங்க இன்னும் சாதிக்கணும். எல்லா வகையிலும் நாங்க சப்போர்ட்டா இருப்போம்'னு என்கரேஜ் பண்ணி பேசினார்.
அவர்கிட்டே, எங்களோட கேரம் கோச்சிங் சென்டரை மேம்படுத்தணும்னு ஏற்கெனவே கோரிக்கை வெச்சிருந்தேன். அவ்ளோ பிஸியான சூழலிலும், இன்னைக்கு அதை ஞாபகம் வெச்சிருந்து 'கோச்சிங் சென்டரை ரெடி பண்ணிக் கொடுத்துட்டீங்களா'ன்னு அதிகாரிங்கக்கிட்ட கேட்டது ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. கேரம்ல ஜெயிச்ச எங்க பொண்ணுங்கக்கிட்ட மட்டுமில்லாம குடும்பத்தினரிடமும் உதயநிதி சார் ரொம்ப கனிவா எளிமையா பேசினது நெகிழ்ச்சியா இருந்துச்சு. உதயநிதி சாருக்கு நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். எங்க வருத்தத்தை விகடன்தான் எழுதியது. குடும்ப கஷ்டத்தால என் வருத்தத்தை பதிவு பண்ணேன். இந்த நேரத்துல விகடனுக்கும் என் நன்றி சொல்லிக்கிறேன்" என்பவர், எதிர்கால திட்டங்களையும் பகிர்ந்துகொண்டார்.
"இந்தப் பரிசுத்தொகை மூலமா இத்தனைநாள் நாங்கப் பட்டக் கஷ்டம் எல்லாம் தீர்ந்துடுச்சுன்னு நினைக்கிறேன். ஷீட் போட்ட வாடகை வீட்லதான் குடியிருந்தோம். ஆட்டோ வாடகை, வீட்டு வாடகை, குடும்பச் செலவு, காசிமாவுக்கான போக்குவரத்து கட்டணம் எல்லாமே கடன் வாங்கித்தான் சமாளிச்சுட்டு வந்தோம். என் பொண்ணாலதான் எங்கக் குடும்பத்துக்கு இப்போ நல்லது நடந்திருக்கு. அவளுக்கு பயிற்சி கொடுத்ததுக்கு ரொம்ப பெருமைப்படுறேன். நாங்கப் பட்டக் கஷ்டம் எதுவும் வீண் போகல. குகேஷுக்கு மட்டும் 5 கோடி ரூபாய் பரிசு அறிவிச்சிருக்காங்க, காசிமாவுக்கு அறிவிக்காதது பற்றி என்கிட்ட கேட்டு வருத்தத்தை பதிவு செஞ்சது விகடன்தான். மனவருத்தம் இருந்ததால நானும் சொன்னேன்.
அதிகாரிங்க சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் போய்ட்டிருக்குன்னும் அதனால்தான் தாமதம்னு சொன்னாங்க. எங்களை கூப்பிடும்போது, இவ்ளோ பெரிய தொகை கிடைக்கும்னு எதிர்பார்க்கல. ஆனா, தமிழ்நாடு அரசு ஏதாவது செய்யும்ங்கிற நம்பிக்கை இருந்தது. அதுவும், கேரம் வரலாற்றிலேயே 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை இதுவரை கொடுத்ததில்லை. காசிமாவுக்குத்தான் முதல்முறைன்னு தெரிஞ்சப்போ இன்னும் பெருமையாகிடுச்சு. காசிமா மட்டுமில்லாம மற்ற வீராங்கனைகள் நாகஜோதி, மித்ராவுக்கும் தலா, 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை வழங்கினார். திரும்பவும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சாருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றியை தெரிவிச்சுக்கிறேன்" என்கிறார் உணர்ச்சிப்பெருக்குடன்.