ரஷியாவில் புற்றுநோய் தடுப்பு மருந்து தயார்! இலவசமாக வழங்கவும் திட்டம்
மாஸ்கோ: புற்றுநோய்க்கான தடுப்பு மருந்தை உள்நாட்டு ஆராய்ச்சியின் மூலம் தயாரித்திருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி முதல் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இந்த தடுப்பு மருந்தானது மனித உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அவற்றை வெளியேற்றும் ஆற்றலை அளிக்கும் என்று ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவ பரிசோதனை ஆராய்ச்சிகளின்போது, இந்த தடுப்பு மருந்தானது புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடையாமல் தடுப்பதை ஆய்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன என்று நுண்ணுயிரியல் ஆராய்ச்சிக்கான கேமாலேயா தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸாண்டர் கிண்ட்ஸ்பெர்க் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏஐ என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த மருந்தை மிகக்குறுகிய கால அவகாசத்தில், சுமார் அரை மணி நேரத்தில் தயாரிக்க முடியும் என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில், புற்றுநோய் தடுப்பு மருந்து மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுமென்று ரஷிய சுகாதாரத் துறையின் ரேடியாலஜி மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆண்ட்ரே கேப்ரின் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.