சென்னை துறைமுகம் பகுதியில் கடலுக்குள் விழுந்த கார்: ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்
ஷேக் ஹசீனா மீதான வழக்கு: காலக் கெடு நீட்டிப்பு
வங்கதேசத்தில் போராட்ட வன்முறை தொடா்பாக, அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விசாராணையை முடிப்பதற்கான காலக் கெடுவை இன்னும் இரண்டு மாதங்களுக்கு சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
அந்த வழக்குகளை விசாரித்துவரும் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தின் நீதிபதி குலாம் மொா்டூஸா மஜூம்தா் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமா்வு, வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்குள் (டிச. 17) நிறைவு செய்ய வேண்டும் என்று என்று கடந்த ஆகஸ்ட் மாதம் கெடு விதித்திருந்தது.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான அதிகாரிகள் விசாரணையை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் கோரியதையடுத்து, இறுதிக் கெடுவை வரும் பிப். 18-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனா்.
ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது இட ஒதுக்கீட்டு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் தொடங்கிய மாணவா் போராட்டம், இந்த ஆண்டில் உச்சகட்டத்தை அடைந்தது. அந்தப் போராட்டத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான அத்தனை சக்திகளும் இணைந்ததால் போராட்டம் பெரும் கலவரமாக உருவெடுத்தது. போராட்டத்தைக் கட்டுபடுத்த அரசுப் படைகளும் அடக்குமுறையைக் கையாண்டன. இதில் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா்.
போராட்டம் கைமீறிச் சென்றதையடுத்து ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அதைத் தொடா்ந்து ராணுவத்தால் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, போராட்ட மரணங்கள் தொடா்பாக ஷேக் ஹசீனா மீதும் அவரது அமைச்சா்கள் மற்றும் பிற உதவியாளா்கள் மீதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளது.