சென்னையில் மீண்டும் காக்கா பிரியாணி?
சென்னையில் 'காக்கா பிரியாணி' விற்கப்படுகிறதா? விற்கப்பட்டுக் கொண்டிருக்கலாம் என்ற அதிர்ச்சியை அளித்திருக்கிறது ஒரு செய்தி.
சென்னையில் தற்போது சைவ உணவகங்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆம்பூர், வாணியம்பாடி, ஹைதராபாத் பிரியாணி என உணவகங்களும், எங்கு பார்த்தாலும் சாலையோர சிக்கன், பீஃப் பிரியாணி அண்டாக்கள் பகல் 12 மணிக்கு பிரியாணி அண்டாக்களை தட்டும் சத்தம் கேட்டால் பின்னிரவு 3 மணி வரை சப்தம் ஓய்வதில்லை.
இருப்பினும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஃபிரைட்-ரைஸ் கடைகளும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
உணவுகள் மீதான மோகம் அனைவருக்கும் அதீத அளவில் இருந்தாலும், விருப்பப்பட்ட உணவுகளுக்காக சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பரிந்துரைக்கும் உணவுகளைத் தேடிச் சென்று உண்ணும் வழக்கமும் தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறது.
சென்னை மற்றும் ஒட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில், சைவ உணவங்கள் கண்களில் தென்பட்டாலும், திரும்பும் திசையெங்கும் தள்ளுவண்டிக் கடைகளும், பிரியாணிக் கடைகளும், பிரியாணி அண்டாக்களும் வரிசை கட்டி நிற்கின்றன.
இதையும் படிங்க..:டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய, மாநில அரசு கடிதங்களில் என்னதான் இருக்கிறது?
கோழி, ஆடு, மாடு இறைச்சிகள் பிரியாணிகளில் உபயோகப்படுத்தப்பட்டாலும், மிகக் குறைந்த விலைகளில் விற்கப்படும் பிரியாணியில் என்ன இறைச்சி இருக்கிறது; உண்மையில் அவர்கள் கூறும் இறைச்சிதான் சேர்க்கப்படுகிறதா என்ற சந்தேகம் உணவின் மசாலா சுவையில் யாரும் யோசித்து பார்ப்பதே இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக, சென்னை கடைகள் மற்றும் உணவகங்களில் நாய், பூனைகளின் இறைச்சிகளும் கலக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
நடிகர் மாதவன் நடித்த ‘ரன்’ திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் சாப்பிடும் ரூ. 5 பிரியாணி, காக்கா இறைச்சி கலந்திருப்பதாக சித்திரிக்கப்பட்டிருக்கும்.
இதேபோல, சென்னை, சுற்றுவட்டாரங்களில் விற்கப்படும் பிரியாணியில் காகத்தின் இறைச்சி கலக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை அனைவருடைய மனதிலும் எழுப்பியுள்ளது தற்போதைய செய்தி.
திருவள்ளூர் மாவட்டம் நயப்பாக்கம் காப்புக்காடு அருகே உள்ள திருப்பாக்கம் கிராமத்தில் கொல்லப்பட்ட காக்கைகளுடன் தம்பதியை வனத் துறையினர் பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க..:சொல்லப் போனால்... ஒரு அயோத்தி போதாதா
காக்கைகள் கொல்லப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர், திருப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், பூச்சம்மா இருவரையும் பிடித்து அவர்களிடமிருந்து சன்னமான விஷம் வைத்துக் கொல்லப்பட்ட 19 காகங்களை மீட்டனர்.
இந்தக் காகங்கள் விஷம் வைத்து வேட்டையாடப்பட்டிருக்கின்றன. இந்த விஷத்தை உள்ளூர் பூச்சிகொல்லி மருந்துக் கடைகளில் இருந்து அவர்கள் வாங்கியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கருதுகின்றனர்.
இது பற்றி ரமேஷ், பூச்சம்மா கூறுகையில், தங்களது 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் அடங்கிய 7 பேர் கொண்ட குடும்பத்தின் உணவுத் தேவைக்காகவே காகங்களை கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சாலையோர பிரியாணி உணவகங்கள், நெடுஞ்சாலைகளில் இயங்கும் சிறிய பிரியாணி விற்பனை நிலையங்களுக்காகக் காகங்களை கொன்று அவற்றின் இறைச்சியை வழங்குவதற்காக இருக்கலாமோ என்று சந்தேகிக்கபபடுகிறது.
காகங்களின் இறைச்சியை உண்பதால் உடல் நலப் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்று இந்தத் தம்பதியினர் தெரிவித்தாலும், காகங்களை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட விஷம் உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் காகங்களை வேட்டையாடுவது குற்றமல்ல. வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி பயிர்களைச் சேதப்படுத்துகிற சிறு விலங்குகள் - பூச்சிகள் - உயிரினங்கள் வகைப்பட்டதாகவே காக்கைகள் கருதப்படுகின்றன. இதனால், காகங்களை வேட்டையாடியவர்களுக்கு ரூ. 5,000 அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..:மனிதர்கள் மீதான பற்று..! மலையாள இயக்குநர் ராஜீவ் ரவியின் திரை உலகம்!
சென்னை அருகே புறநகர்ப் பகுதியில் சில மாதங்கள் முன் சட்டவிரோதமாக நிறைய பூனைகளைப் பிடித்து வைத்திருந்த சிலர் பிடிபட்டனர். விசாரணையில் இவர்கள் பூனை இறைச்சியை மாநகரிலுள்ள பிரியாணிக் கடைகளுக்கு சப்ளை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டது. எனினும், இந்த வழக்குகள் எல்லாம் என்னவாயின என்று தெரியவில்லை.
ஏற்கெனவே, சில ஆண்டுகளுக்கு முன் நாய், கழுதை இறைச்சிகள் விற்கப்படுவதாகவும் விலை மலிவாகக் கிடைப்பதால் அசைவ உணவகங்களில் பயன்படுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.
இதேபோல, சில பத்தாண்டுகளுக்கு முன் வெளி மாவட்டங்களில் காக்கைகள் பிடிக்கப்பட்டுச் சென்னை அசைவ உணவுக் கடைகளில் பிரியாணிக்காகப் பயன்படுத்தப்படுவதாக செய்திகள் வந்தன (இதையொட்டிதான் திரைப்படத்தில் நடிகர் விவேக்கின் காக்கா பிரியாணி காட்சி இடம் பெற்றிருந்தது).
இப்போது சென்னைக்கு அருகிலேயே கொல்லப்பட்ட நிலையில் காக்கைகள் சிக்கியிருக்கின்றன. காக்கைகளை வேட்டையாடுவது குற்றமல்ல என்றாலும் உண்மையில் வீட்டுக்காகத்தான் வேட்டையாடினார்களா? பிரியாணிக் கடைகளில் விற்பதற்காக வேட்டையாடினார்களா? என்று உறுதி செய்யப்படுவது மிகவும் அவசியம்.
ஏனென்றால், வெளியூர்களிலிருந்து சென்னை மாநகரில் வந்து பணிபுரியும் லட்சக்கணக்கானோர் இந்த சாலையோரக் கடைகளைத்தான் நம்பியிருக்கின்றனர்.
எதற்கும் பிரியாணி சாப்பிடுவோர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது!