CLEAN KEERANATHAM: `உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி' - தேசிய அளவில் விருதுபெற்ற கீரணத்தம்
கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகில் உள்ள கீரணத்தம் ஊராட்சி 'நாட்டிலேயே உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி' என்ற விருதுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதினை கடந்த டிசம்பர் 11-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பெற்றுள்ளார் ஊராட்சித் தலைவர் பழனிசாமி. அரசுடன் இணைந்து RAAC என்ற தன்னார்வலர் நிறுவனம் மற்றும் சில பன்னாட்டு நிறுவனங்களும் இணைந்து இதை சாத்தியமாக்கியுள்ளன.
நம் நாட்டில் உள்ள 2,68,938 பஞ்சாயத்துகளில் கீரணத்தம் தேர்வு செய்யப்படுவதற்கு திடக்கழிவு மேலாண்மையில் 100 சதவிகிதம் வெற்றி, 'என் கனவுப் பள்ளி' திட்டம், ஸ்மார்ட் கிளாஸ் ரூம், சிறப்புக் குழந்தைகளுக்கானப் பயிற்சி என பட்டியல் நீள்கிறது.
எங்கு சென்றாலும் திடக்கழிவுகள் மலை போன்று குவிந்திருக்கும் காலத்தில், ஊரினுள் ஓரிடம்கூட கழிவு நிலமாக இருக்கக் கூடாது என்பதற்காக வீடு வீடாகச் சென்று கழிவுகளை வாங்குவதற்கு தனியாக 4 மின்சார வாகனங்களும், அவற்றை இயக்க 10 நபர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கழிவுகளை சேகரிக்கும் பொழுதே 4 வகையாகப் பிரித்து வாங்குவதுடன், அதனை மறுசுழற்சிக்கும் அனுப்புகின்றனர். இந்தத் திட்டத்தினால் சாலையோரங்களில் கிடந்த 20 குப்பைக் கிடங்குகள் அகற்றப்பட்டுள்ளது. 'CLEAN KEERANATHAM ' என்ற இந்த திட்டம் ஊராட்சி விருது வாங்குவதில் பெரும் பங்காற்றியுள்ளது .
அதனைத் தொடர்ந்து சிறப்புக் குழந்தைகளுக்கான சிகிச்சை மையத்தையும் நிறுவியுள்ளனர். அது குறித்து இத்திட்ட மேலாளர் பேசுகையில், "சாதாரணமா அரசு மருத்துவமனையில் மட்டும் தான் இந்த கேர் சென்டர் ஃபெஷாலிட்டி இருந்தது. ஆனா இங்க வந்து ஒரு பஞ்சாயத்தில் இருக்கிற எல்லா யூனியனுக்கும் ஒரு சென்டர் இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு முன்னாள் கலெக்டர் எங்களுக்கு பரிந்துரை பண்ணினாரு. அவர் சொன்னதை தனியார் நிறுவனத்தினுடைய ஃபண்டிங் மூலம் செய்திருக்கிறோம். இங்க ஆறு மாதத்துல இருந்து ஆறு வயசு வரைக்கும் உள்ள குழந்தைகள் இருக்காங்க. இது ஒரு Early intervention சென்டர். இங்க வர குழந்தைகளிடம் இருக்கும் குறைபாட ஆரம்ப நிலையில கண்டுபிடித்து உதவி பண்ணா, அந்த குழந்தைகளுக்கு க்யூர் ஆகி ஸ்பெஷல் சில்ட்ரன்(SPECIAL CHILDREN )மெயின் ஸ்ட்ரீம் (MAIN STREAM)ஆக நிறைய வாய்ப்பு இருக்கு. குழந்தைகள் 13 வயசுக்கு மேல போனா அவங்களுக்கான தெரபி எல்லாமே சேலஞ்ச் ஆகிடும்" எனக் கூறினார் .
இச்சிறப்பு மையத்தில் ஃபிசியோதெரபி, வொக்கேஷனல் தெரபி போன்ற நிறைய தெரபி அளிக்கப்படுவது மட்டுமல்லாமல் சிறப்புக் கல்வியும் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இலவசமாக அக்குழந்தைகளுக்கு சென்றடைகிறது என்பதே இதன் சிறப்பு. இதுவரை 55 குழந்தைகள் இருக்கும் இம்மையத்தை RAAC தன்னார்வலர் அமைப்பு மற்றும் கோயம்புத்தூர் Spastic trust இணைந்து நடத்துகின்றன. அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களது குறைபாடுகளுக்கு ஏற்ற மாதிரியான சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கிராமத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய மற்றொரு திட்டம் "எனது கனவுப் பள்ளி". இத்திட்டம் குறித்தும் பள்ளியின் வளர்ச்சி குறித்தும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, "இந்தத் திட்டத்தோட நோக்கம் ஒரு அரசு பள்ளிய தனியார் பள்ளிக்கு நிகராக கொண்டு வருவது தான். அந்த அடிப்படையில ஒவ்வொரு பயிற்சியா உள்ள கொண்டு வந்தோம். ஒரு தனியார் பள்ளிய எடுத்தோம்னா விளையாட்டுக்கு ரொம்ப முக்கியத்துவம் தருவாங்க. அதே மாதிரி இங்கேயும் இருக்கணும் என்பதற்காக முதலில் ஒரு PT மாஸ்டர் நியமனம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஒரு மாத காலத்திலேயே ஒரு பெரிய ஸ்போர்ட்ஸ் டே நடத்தினோம். அதற்கென தனி சீருடை கொடுத்தோம். பெற்றோர்களும் குழந்தைகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாங்க. கிராமத்தில் இருக்கிற குழந்தைகளும் கத்துக்கனும் என்பதற்காக ஒரு இசை பேண்ட் குழு உருவாக்கினோம். இந்தத் திட்டம் மூலமா அதற்கான உதவியும் எங்களுக்கு கிடைத்தது. இந்த திட்டம் மூலமா பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தினோம். அது மூலமா குழந்தைகளை ஊக்குவிக்கவும் பாராட்டவும் எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதைத் தவிர ஓரிகாமி போன்ற நிறைய கூடுதல் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
மாணவிகளுக்கு தேவையான சேனிட்டரி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சந்திராயன் 2 நிகழ்வை நேரில் சென்று பார்க்கக்கூடிய வாய்ப்பை ஐந்து குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தோம். மீதமான உணவு மற்றும் காய்கறிக் கழிவுகளை வச்சு ஒரு பயோ கேஸ் பிளாண்ட் (bio gas plant) உருவாக்கி இருக்கோம். பெரிய அளவில் சமைக்க முடியலேனாலும் முட்டை வேக வைக்க தேவையான அளவுக்கு அது பயன் தருகிறது. சென்ற வருடம் சிறந்த தலைமை ஆசிரியருக்கான அண்ணா விருது எங்க பள்ளிக்கு வழங்கப்பட்டது. அதற்குக் கிடைத்த 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையின் மூலமாக எந்த அரசு பள்ளியிலும் இல்லாத வகையில் ஒரு நூலகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து போட வேண்டும் என்பதற்கான முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் சிறு விளையாட்டுகள் மூலம் வலியுறுத்துகின்றோம். பள்ளிக்கூடத்தில கத்துகிறத அவங்க வீட்டிலும் சமூகத்திலும் செய்வாங்கன்னு நாங்க நம்புறோம். புத்தகம் வாசிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்போம். காலையில குழந்தைங்க நேரமாகவே வந்துவிடுவாங்க; அவங்களுக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்து படிப்பாங்க" என மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.
CSR என்பது CORPORATE SOCIAL RESPONSIBILITY ஆகும், தனியார் பெரு நிறுவனங்கள் லாப நோக்கம் அல்லாது சமூக வளர்ச்சிக்காக செயல்படுவதை CSR என்பர் . RAAC நிறுவனம் பிற நிறுவனங்களுடன் இணைந்து இவ்வாறே ஊரின் வளர்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளது. RESIDENCE AWARENESS ASSOCIATION COIMBATORE(RAAC) என்ற இந்த தன்னார்வலர் நிறுவனம் கீரணத்தம் மட்டும் அல்லாது கோவை மாவட்டத்தின் பேரூர், மேட்டுப்பாளையம் மற்றும் வேறு சில ஊராட்சிகளிலும் அரசுடன் இணைந்து நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. கீரணத்தம் ஊராட்சியின் வளர்ச்சியில் இவர்களது பங்கு முக்கியமானது.
``இந்த பகுதியில் சுற்றி ஐ.டி பார்க்ஸ் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகம். நிறைய ஊர்ல இருந்து இந்தப் பகுதியில வந்து வேலை செஞ்சுட்டு இருக்காங்க. ஆனா இந்த பகுதி மக்களின் படிப்பு விகிதம் குறைவானதாக இருக்கு . இந்த பகுதியில இருந்து வந்து இந்த நிறுவனங்களில் வேலை பாக்குறவங்க எண்ணிக்கை என்பது ரொம்ப குறைவுதான் . அதனால இந்தப் பகுதி மக்களுக்கு தரமான கல்வி கிடைப்பதன் மூலம் அவங்களுக்கு அவங்க பகுதியிலேயே வேலை கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கு . அந்த எண்ணத்துலதான் "என் கனவு பள்ளி" திட்டம் ஆரம்பிச்சோம் .
கீரணத்தம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்கூட பேசி அவங்க எந்த மாதிரி பள்ளி வேணும் என்று எதிர்பார்க்குறாங்கன்னு முதல்ல தெரிஞ்சுக்கிட்டோம். அப்படிதான் மியூசிக் பேண்ட் , ஸ்போர்ட்ஸ் யூனிஃபார்ம் எல்லாமே கொண்டு வந்தோம். பள்ளியின் வளர்ச்சிப் பணிகளைப் பார்த்துட்டு பெற்றோர்களும் நிறைய ஆதரவு தந்தாங்க. தொடர்ந்து இத எல்லாம் மேம்படுத்த என்ன பண்ணுறதுன்னு பாத்துட்டு இருக்கோம்" என்று பள்ளியின் மேம்பாட்டில் தங்கள் பங்களிப்பை விளக்கினார்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர்களாகிய ரஞ்சித் சாமுவேல் மற்றும் அவரது மனைவி ஸ்நேகா சாமுவேல்.
கீரணத்தம் ஊராட்சி 'உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி' என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமெனில் அந்த ஊராட்சி, மக்கள் பயன்படுத்தும் பொதுப் பகுதிகளில் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். விருதுப் பெற்ற ஊராட்சித் தலைவர் பழனிசாமியை தொலைபேசியில் அழைத்து நாம் பேசுகையில், "இந்த ஊராட்சியோட வளர்ச்சியில NGO முக்கிய பங்கு வகிச்சிருக்காங்க, சந்தோஷம் . நம்ம பக்கம் இருந்து மக்கள் மற்றும் ஊராட்சியோட கட்டமைப்புக்கு என்ன பண்ணனுமோ அத பண்ணிருக்கோம். மின்சாரம் கம்மியா பயன்படுத்தும் தெரு விளக்குகள், பிற ஊராட்சிய எளிதா இணைக்கும் சாலைவழி, பேருந்து நிறுத்தம், இன்டெர்நெட் வசதி என நிறைய வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டோம் . இது எல்லாமே ஒருசேர அமைஞ்சதால தான் விருது கிடைச்சிருக்கு" என்றார்.