அந்நிய நிதி வெளியேற்றத்தால் மீண்டும் சரிந்த பங்குச் சந்தைகள்!
திருப்பத்தூர்: இடிந்த விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்; முகாமிடும் சமூக விரோதிகள்- சீரமைக்க கோரும் மக்கள்
திருப்பத்தூர் அடுத்த மடவாளத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியின் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு 45 ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. இதனால், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு எந்தநேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையிலிருந்தது. தற்போது தொடர்ந்து பெய்து வந்த கன மழையால் பள்ளியின் பின்புறம் உள்ள சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.
இரவு நேரம் என்பதால் எந்த ஒரு அசம்பாவிதமும் நேராமல் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினார்கள். மேலும் பள்ளிச் சுற்றுச்சுவர் அனைத்தும் விழும் தருவாயில் ஆங்காங்கே ஓட்டை விழுந்தும் இடிந்தும் காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் இந்த பக்கம் செல்லும்போதோ அல்ல விளையாடும்போதோ நம்மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்திலிருந்து வருகின்றனர். இதைப் பற்றி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரித்த போது, ``நாங்களும் அவ்வழியே செல்லும் போது பயந்து பயந்து கடக்க வேண்டிய நிலை தான் உள்ளது.
எங்கள் வீடுகளும் இந்த சுற்றுச் சுவரையொட்டி தான் அமைந்துள்ளது. இவ்விடத்தில் ஆடு, மாடுகள் கட்டுவதற்குக் கூட பல முறை யோசித்துத் தான் கட்டுவோம். இது போன்ற சூழல் இருந்தால் எப்படி எங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது. அது மட்டுமல்லாமல் வகுப்பறை அருகில் புதர் மண்டி எவ்வித பராமரிப்பின்றி காணப்படுகிறது.
இந்த சுற்றுச் சுவர் சுற்றிலும் நிலங்கள் உள்ளதால் புழு, பூச்சிகள் , பாம்புகள் பள்ளிக்குள் நுழைவதுடன் அதன் நடமாட்டமும் தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் இவ்விடத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் இந்த சுற்றுச் சுவரின் மேல் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை இங்கே விட்டுச் செல்கின்றனர்" என்று கூறுகின்றனர்.
இது குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், "பள்ளியின் எதிரில் மட்டும் சுத்தம் செய்கிறார்கள். ஆனால் பின்புறம் யாரும் கண்டுகொள்வதில்லை. நான் இந்த பள்ளியின் அருகே வசிப்பதால் இரவு நேரங்களில் மது அருந்துபவர்களை என் கண் எதிரே பார்ப்பேன். ஆனால் என்னால் ஏதும் செய்ய முடியாது. ஒரு முறை நாங்கள் விளையாடும் போது உடைந்த பாட்டில் காலில் பட்டு ரத்தம் வந்தது.
இதைப் பற்றி ஆசிரியர்களிடம் கூறினால், இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்கள். ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று வேதனையுடன் கூறினார்.
திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி இந்த பள்ளியின் முன்னாள் மாணவர். இவர் இங்கு ஒருமுறை பார்வையிட்டு எஞ்சியுள்ள சுவர்களையும் இடித்து விட்டு பள்ளியை முறையாகச் சீரமைத்துத் தர வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.