பிரதமர் மோடியுடன் சந்திப்பு; `அரசியல் பேசவில்லை' - மாதுளை பழங்களை வழங்கிய சரத் ப...
ஒரு ஜாக்கெட் தைக்கிறதுக்கு ஒரு ரூபாதான் கூலி- ஒரு டெய்லரின் கதை
தைக்க வேண்டிய துணிகளைப் போட்டு வெட்டுறதுக்கு ஒரு மர டேபிள், தையல் மெஷின்கள், கடை நிறைய கலர் கலரா துணிகள்... இவற்றுக்கு நடுவுல சையத் மதர் வேலைபார்க்கிறதுக்கு கொஞ்சம் இடம். இவ்ளோ தான் சையத் மதரோட டெய்லரிங் ஷாப்.
ஆனா, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில 'மதர் பாய்'னு சொன்னா செம்ம ஃபேமஸ். பாட்டி, அம்மா, மகள்னு அந்த ஊர்ல இருக்கிற மூணு தலைமுறைப் பெண்களும் மதர் பாய்கிட்ட தான் துணி தைக்கக் கொடுத்திட்டிருக்காங்க. ஒரு சாயங்கால நேரத்துல அவரோட டெய்லரிங் ஷாப்புக்குப் போனோம்.
“வேப்பனப்பள்ளி தான் என்னோட சொந்த ஊரு. துணி மில்கள்ல நூல் நூற்கிற வேலைக்காக அப்பாவும் அம்மாவும் மும்பை, கொல்கத்தான்னு என்னையும் தூக்கிட்டு ஊர் ஊரா போயிட்டு இருந்தாங்க. அதனால, என்னால தொடர்ந்து படிக்க முடியல. ரொம்ப கஷ்ட ஜீவனம் வேற. மூணாவது வரைக்கும்தான் படிச்சேன். அப்புறம் மும்பையிலேயே ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில, தைச்ச துணிகள்ல ஊக்கு வைக்கிற மாதிரி சின்னச் சின்ன வேலைகள் செஞ்சுக்கிட்டிருந்தேன். படிப்படியா வேலை கத்துக்கிட்டு 15 வயசுல தையல் மெஷின்ல உட்கார்ந்தேன். இப்போ எனக்கு 68 வயசாகுது. 53 வருஷமா இந்தத் தொழில் என்னை கைவிடலம்மா'' என்று முகம் மலர்ந்தவர், தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
1977-ல சொந்த ஊர் வேப்பனப்பள்ளிக்கே வந்துட்டோம். ஒரு சின்னக்கடையை வாடகைக்கு எடுத்து தையல் வேலை செய்ய ஆரம்பிச்சேன். 1977-ல ஒரு பிளவுஸ் தைக்கிறதுக்கு ஒரு ரூபா கூலி. சட்டைக்கு 5 ரூபா, பேன்ட்னா 25 ரூபா. இப்போ 2024-ல பிளவுஸுக்கு 200 ரூபாயும், சட்டைக்கு 300 ரூபாயும், பேன்ட்டுக்கு 400 ரூபாயும் தைக்கூலியா வாங்குறேன். அப்போ கடை வாடகை 15 ரூபா. இப்போ அதே கடைக்கு 4 ஆயிரம் ரூபா வாடகைக் கொடுத்திட்டிருக்கேன். மாசம் 15 ஆயிரம் வரைக்கும் சம்பாதிக்கிறேன். எனக்கு மூணு பசங்க. தையல் மெஷின் மிதிச்சுதான் மூணு பிள்ளைங்களையும் வளர்த்து, ஆளாக்கிக் கல்யாணம் செஞ்சு கொடுத்தேன். நடுத்தர வாழ்க்கைதான்... இருந்தாலும் நிம்மதியா இருக்கேன்'' என்றவர், கடந்த இருவது வருடங்களா நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமா தையல் பயிற்சி தந்துட்டிருக்கிறார்.
''வீட்ல இருக்கிற நேரத்துல உபயோகமா ஒரு கைத்தொழில் கத்துக்கட்டுமேன்னு என்கிட்ட அனுப்புறாங்க. கல்யாணமான பொண்ணுங்ககூட டெய்லரிங் கத்துக்க வர்றாங்க. ஒரு வருஷத்துக்கு பதினைந்து பேராவது கத்துக்குறாங்க. சுடிதார், பிளவுஸ், சட்டை, பேன்ட்னு எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்து முழு டெய்லர் ஆக்கி அனுப்பிடுவேன். இருவது வருஷத்துல நூறு பேருக்கும் மேல இலவசமா கத்துக்கொடுத்திருக்கேன். இப்போ நாலு வருஷமா, ஆயிரம் ரூபா கட்டணம் வாங்க ஆரம்பிச்சிருக்கேன். இலவசமா சொல்லிக்கொடுக்கிறப்போ சிலர் பாதியிலேயே பயிற்சியை விட்டுட்டுப் போயிடுறாங்க. அப்படி செய்யக்கூடாதுங்கிறதுக்காக பணம் வாங்க ஆரம்பிச்சிருக்கேன். கையில ஒரு தொழில் இருக்கிறதால, அந்தக் குழந்தைங்களுக்கும் வாழ்க்கை மேல ஒரு நம்பிக்கை வருதில்லையா'' என்கிறார்.
படிப்பில்லைன்னா என்ன; கைத்தொழில் கத்துக்கிட்டும் கெளரவமா வாழ முடியும்னு நிரூபிச்சதோட நிக்காம, தான் கத்துக்கிட்ட தொழிலை பல பேருக்கு இலவசமாகவும் கற்றுத்தரும் மதர் பாய், இந்த உலகுக்கு ஓர் எடுத்துக்காட்டுத்தானே!
- மாகலட்சுமி