சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீரானது!
சில்க் ஸ்மிதா பிறந்த நாள்: தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்து; உற்சாகமாக கொண்டாடிய ஈரோடு ரசிகர்!
1980களில் தொடங்கி 1996ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தவர். அவர் மறைந்து 28 ஆண்டுகளாகியும் அவரது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார் ஈரோடு, அகில்மேடு வீதியில் டீக்கடை நடத்தி வரும் குமார்.
சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான குமார் தனது டீக்கடை முழுவதும் எந்தப் பக்கம் திரும்பினாலும் சில்க் ஸ்மிதாவின் பல படங்களை ஒட்டி வைத்துள்ளார். சில்க் ஸ்மிதாவின் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும், அவரது பிறந்த நாளன்று ஏழை, எளிய மக்களுக்குத் தன்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் குமார்.
அந்த வகையில், இந்த ஆண்டும் சில்க் ஸ்மிதாவின் 65வது பிறந்த நாளை தூய்மைப் பணியாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியதுடன், அவர்களுக்குப் புத்தாடை மற்றும் உணவு வழங்கியுள்ளார் குமார். இதுதொடர்பாக அவரிடம் பேசுகையில், "சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகனான நான், கடந்த 18 ஆண்டுகளாக சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாளன்று எனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், ஏழை மக்களுக்கு இனிப்பு கொடுத்துக் கொண்டாடிவருகிறேன்.
சோதனையான காலகட்டத்தில் கூட எனது டீக்கடையில் ஒட்டி வைத்துள்ள சில்க்கின் கறுப்பு, வெள்ளை புகைப்படத்தையும், அவரது கண்களையும் சற்று நேரம் உற்று நோக்குவேன். அதில் எனக்கான சோகம் எல்லாம் பறந்துவிடும். கடந்த ஆண்டு முதல் தூய்மைப் பணியாளர்களுக்குச் சேலைகள், சர்ட்கள் வழங்கியும், கேக் வெட்டியும் சில்கின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடி வருகிறேன். 2025ஆம் ஆண்டிற்கான சில்க் ஸ்மிதா படத்துடன் கூடிய காலண்டரையும் வழங்கியுள்ளேன். இதில் எனக்கு ஒருவித மனநிம்மதி கிடைக்கிறது" என்றார் மகிழ்ச்சியுடன்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...