IND vs Aus PM 11: அசத்திய இளம் வீரர்கள்... சொதப்பிய ரோஹித்; ஆஸி பிரதமர் அணியை வீழ்த்திய இந்தியா!
பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கும் இந்திய அணி, பி.எம் 11 எனப்படும் ஆஸ்திரேலிய பிரதமர் தேர்ந்தெடுத்த அந்நாட்டு வீரர்கள் அடங்கிய அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
முன்னதாக, இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேரில் அழைத்து விருந்தளித்துக் கௌரவித்தார். அதைத்தொடர்ந்து, கான்பெராவில் நேற்று முன்தினம் பி.எம் 11 அணிக்கும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கும் இரண்டு நாள் பயிற்சி ஆட்டம் திட்டமிடப்பட்டது. முதல்நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டதைத்தொடர்ந்து, இரண்டாம் நாளான நேற்று போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் பில்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
இதில், விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. ஜடேஜா, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். அதேசமயம், சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இந்தப் பயிற்சி ஆட்டத்திலும் சேர்க்கப்படவில்லை. மழை காரணமாகப் போட்டி 46 ஓவர்களாகக் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த பி.எம் 11 அணி 43.2 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பி.எம் 11 அணியில் சிறப்பாக ஆடிய 19 வயது தொடக்க ஆட்டக்காரர் சாம் கோஸ்டஸ், 97 பந்துகளில் 14 பவுண்டரிகள் 1 சிக்ஸ் என 107 ரன்கள் அடித்து அசத்தினார். அவருக்கு அடுத்தபடியாக, ஹெனோ ஜேக்கப்ஸ் 61 ரன்கள் எடுத்தார். மறுபக்கம், பந்துவீச்சில் ஹர்சித் ராணா 4 விக்கெட், ஆகாஷ் தீப் 2 விக்கெட், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பேட்டிங்கில், சுப்மன் கில் 50, ஜெய்ஸ்வால் 45, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 42 ரன்கள் அடித்தனர். இதில், ஓப்பனிங் இறங்குவார் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித், நான்காவது வீரராகக் களமிறங்கி 3 ரன்களில் அவுட்டானார். போட்டியின் முடிவில், ஆட்டநாயகன் விருது ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் சாம் கோஸ்டஸுக்கு வழங்கப்பட்டது.
வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) அடிலெய்டில் இரவு பகல் ஆட்டமாக இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.