விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர்!
சென்னை: கைதுக்குப் பயந்து நைட்டியோடு ஜன்னலில் அமர்ந்து இளைஞர் ரகளை; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கங்கை அமரன் (40). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முகநூலில் லைவ் வீடியோவில் காவல்துறை அதிகாரிகள் குறித்து, அமைச்சர் ஒருவர் குறித்தும் அவதூறாகப் பேசினார். அந்த வீடியோ வைரலானதையடுத்து உடனடியாக அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்துக்கு போலீஸ் டீம்முடன் சென்றார். அப்போது அந்த வீட்டின் கதவை போலீஸார் தட்டியதும் உள்பக்கமாகப் பூட்டிக் கொண்ட கங்கை அமரன், "யாராவது உள்ளே வந்தால் வெடிகுண்டு வெடித்துச் சிதறும்" என மிரட்டினார். அதோடு தன்னுடைய கையில் பாக்ஸிங் கிளவுஸையும் மாட்டிக் கொண்டு வீர வசனம் பேசத் தொடங்கினார். அதனால் வேறுவழியின்றி போலீஸார் கங்கை அமரனின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அதைக் கவனித்த கங்கை அமரன், முதல் மாடியின் ஜன்னலில் அமர்ந்தார். அப்போது அவர் நைட்டி அணிந்திருந்தார். இதையடுத்து போலீஸார் கங்கை அமரனைப் பிடிக்க முயன்றனர். இளைஞர் கங்கை அமரனைப் பாதுகாப்பாகக் கீழே அழைத்து வரத் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்தனர். இந்தச் சமயத்தில் திடீரென அவர் மாடியிலிருந்து கீழே குதித்தார். அப்போது கீழே நின்று கொண்டிருந்த போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் கங்கை அமரனைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் தரையில் விழுந்தார்.
அப்போது அவர் வலியால் துடித்தார். உடனடியாக அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்தபோது அவருக்குக் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் கஞ்சா போதையிலிருந்தது தெரிந்தது. தொடர்ந்து கங்கை அமரனிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். விசாரணைக்குப்பிறகு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தால் அண்ணாநகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...