சென்னை: போதைப் பொருள் விற்பனையில் சிக்கிய காவலர்களின் பகீர் பின்னணி
சென்னை, புறநகர் பகுதிகளில் போதை பொருள்களின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. அதைத் தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் அருண், ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். அதோடு போதை பொருள் விற்பனை, கடத்தலைத் தடுக்க அதிதீவிர குற்றப்பிரிவு போலீஸார் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் போதைப் பொருள் விற்பனையில் சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய பரணி என்பவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீலாங்கரை போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அசோக்நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய ஜேம்ஸ் என்பவரை வடபழனி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பரணி, ஜேம்ஸ் ஆகியோரிடமிருந்து போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து மேலும் சிலரை போதை பொருள் கடத்தல், விற்பனை வழக்கில் சென்னைப் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து அதி தீவிர குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``நீலாங்கரை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போதை பொருள் கடத்தல், விற்பனை வழக்கில் கண்ணன், ஜோனத்தன், ரகு ஆகியோர் அளித்த தகவலின்படி காவலர் பரணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மூலம் கிடைத்த தகவலின்படி அசோக்நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய ஜேம்ஸ் என்பவரை வடபழனி போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேற்கு மாம்பலம் ரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த நயிமுல்ஹக் என்பவரைக் கைது செய்தோம். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி கோவை மாவட்டத்தை சேர்ந்த நிர்மல் என்பவரை கைது செய்தோம். இவர்கள் இருவரிடமிருந்து 10 கிராம் எடையுள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான நைமுல்ஹக்கிடம் விசாரணை நடத்தியதில் நைஜீரியாவிலிருந்து பெங்களூருக்கு கடத்தி வரப்படும் போதைப் பொருளை தமிழகத்துக்கு சப்ளை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக பெங்களூருக்குச் சென்று அங்கு குடியிருந்த சுனில் என்கிற ஜெயபிரகாஷ், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த விக்டர் வெட், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புஷ்பேந்திரா சங்கராகி ஆகியோரை கைது செய்தோம். இதில் விக்டர்வெட் தற்போது பெங்களூருவில் தங்கியிருந்து போதை பொருளை சப்ளை செய்து வந்திருக்கிறார். இவர்களிடமிருந்து 59 கிராம் எடையுள்ள போதை பொருள் பறிமுதல் செய்தோம்.
குறிப்பிட்ட இந்த போதை பொருளை ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர்கள் அதிகளவில் பயன்படுத்தும் அதிர்ச்சி தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. ஒரினச்சேர்க்கையாளர்களுக்கான பிரத்தேயக செல்போன் செயலி மூலம் இந்த போதை பொருள் நெட்வொர்க் தங்களின் விற்பனை, கடத்தலை சர்வசாதாரணமாக செய்து வந்திருக்கிறார்கள். சென்னையில் பணியாற்றும் காவலர்களில் ஒருவரும் ஒரினச்சேர்க்கையாளர் செயலி மூலமே இந்த போதை பொருள் நெட்வொர்க் தனக்கு அறிமுகமானதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட காவலர்கள், போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்குபவர்களை மிரட்டி பணம், போதை பொருளை அபகரித்து அதையும் விற்று வந்திருக்கும் அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது. அதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...