திருச்செந்தூா் கோயில் யானை தாக்கியதில் இறந்தவா்கள் குடும்பத்துக்கு திமுக சாா்பில...
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பார்வையிட்டு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.
வங்கக்கடலில் உருவாகிய ஃபென்ஜால் புயல் கரையைக் கடப்பதற்கும் முன்பு தொடங்கிய மழை, கரையைக் கடந்த பின்னரும் மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக் காடாக மாறியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பேரிடர் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் வருகை:
இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறும் வகையில், திங்கள்கிழமை காலை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து மண்டவாய் புதுக்குப்பத்திலுள்ள பேரிடர் கால பல்நோக்கு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 100 பேருக்கு வேட்டி, சேலைகள்,, அரிசி உள்ளிட்டஉணவுப் பொருள்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
மேலும் அந்த மையத்தில்அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மரக்காணம் விருந்தினர் மாளிகைக்கு சென்ற முதல்வர், மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் குறித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படக் காட்சியைப் பார்வையிட்டார். அப்போது அவருக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி விளக்கமளித்தார்.
இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், விழுப்புரம்-கிழக்கு புதுச்சேரி சாலையிலும் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மையங்களுக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட 600 பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் காணை ஊராட்சிப் பகுதிக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அரகண்டநல்லூருக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை ரப்பர் படகுகள் மூலம் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்கும் பணி மேற்கொள்வதை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, திண்டிவனத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 2,000 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினர்.
அப்போது அமைச்சர்கள் க.பொன்முடி, தா.மோ.அன்பரசன், சா.சி.சிவசங்கர், வி.செந்தில்பாலாஜி, விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.மஸ்தான், இரா. லட்சுமணன், அன்னியூர் அ.சிவா, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலர் க.மணிவாசன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் பெ. அமுதா, விழுப்புரம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்துத் துறை ஆணையருமான சுன்சோங்கம் சடக்சிரு, விழுப்புரம் ஆட்சியர் சி . பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.