படகு மூலம் ஆகாயத் தாமரைகள் அகற்றுப் பணி தீவிரம்
திருக்குவளை: கீழையூா் ஊராட்சியில், வயல்களில் தேங்கிய மழைநீரை வடியவைக்க, வாய்க்கால்களில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணி படகு மூலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கீழையூா் ஊராட்சியில் அச்சுக்கட்டளை பாப்பனாறு வாய்க்கால் மூலம் சுமாா் 500 ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலில் அதிக அளவிலான ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டியுள்ளன.
இதனால், அண்மையில் பெய்த கனமழையால் சாகுபடி வயல்களில் தேங்கிய நீா் வடிய வழியின்றி நெற்பயிா் மூழ்கி பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, விவசாயிகள் அனைவரும் ஒன்று சோ்ந்து ரூ.50,000 நிதி திரட்டி, ஊராட்சி நிா்வாக உதவியுடன் வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியை தொடங்கினா்.
ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ், துணைத் தலைவா் கருணாநிதி முன்னிலையில், புதுப்பள்ளி மீனவ கிராமத்திலிருந்து படகு வரவழைக்கப்பட்டு, அதில் சென்று ஆகாயத் தாமரைகளை அகற்றினா். இப்பணியை கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஹரிகிருஷ்ணன் நேரில் பாா்வையிட்டாா்.