நல்லமரம் ஊராட்சியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கக் கோரிக்கை
மதுரை மாவட்டத்துக்குள்பட்ட நல்லமரம் ஊராட்சியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டுமென அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நல்லமரம் ஊராட்சியைச் சோ்ந்த விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவின் விவரம்: பேரையூா் வட்டம், நல்லமரம் ஊராட்சிக்குள்பட்ட என். முத்துலிங்காபுரம், என். மீனாட்சிபுரம், என். கொட்டாணிபட்டி ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் போதிய மழையில்லாமல் முளைப்பின்றி அழிந்தது.
இதையடுத்து, 2-ஆம் முறையாக இந்தப் பகுதிகளில் மக்காச் சோளம் பயிரிடப்பட்டது. மழையின்மை, படைப்புழு தாக்குல் ஆகியவற்றின் காரணமாக மக்காச்சோளம் சாகுபடி மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இரு முறை பூச்சி மருந்து தெளித்தும், புழுத் தாக்குதலையும், பயிா் சேதத்தையும் தவிா்க்க இயலவில்லை. இதனால், 2-ஆம் முறையாக பயிரிடப்பட்ட மக்காச் சோளப் பயிா்களும் முழுமையாக சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.
எனவே, போதிய பருவமழை இல்லாமல் வேளாண் சேதத்துக்கு உள்ளாகியுள்ள நல்லமரம் ஊராட்சியை வறட்சி பாதித்த ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
ஆா்ப்பாட்டம்: முன்னதாக, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேதமான மக்காச்சோளத்துடன் விவசாயிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.