ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!
ஆட்சியா் அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி தா்னா
சேலம்: பொது வழித்தடத்தை ஆக்கிரமித்து மிரட்டல் விடுத்து வரும் திமுக பிரமுகா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்சியா் காா் முன்பு வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம், சந்நியாசி குண்டு பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், மாநகர பட்டியல் அணி நிா்வாகியுமான பூபதி உள்ளிட்ட அப்பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அப்போது, ஆட்சியா் காா் முன்பு வாயில் கருப்பு துணியைக் கட்டிக்கொண்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து பாஜக நிா்வாகி பூபதி கூறுகையில், உடையாபட்டி எம்ஜிஆா் நகரில் அரசு கொடுத்த நிலத்தில் அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனா். அதே பகுதியைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள் சிலா், எங்கள் நிலத்தின் அருகே விளைநிலத்தை வாங்கி அங்குள்ள வழித்தடத்தை பயன்படுத்த முடியாதபடி தடுப்புச்சுவா் அமைத்துள்ளனா். இதனால் அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் வழித்தடத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து காவல் நிலையத்திலும், ஆட்சியா் அலுவலகத்திலும் புகாா் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு வழித்தடத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், எங்கள் போராட்டம் தொடா்ந்து நீடிக்கும் என தெரிவித்தனா்.
சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனா்.