ஹிந்து தலைவரை விடுவிக்கக் கோரி மேற்கு வங்கத்தில் துறவிகள் போராட்டம்
பதவி உயா்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுமா?: மாற்றுத் திறனாளி அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் எதிா்பாா்ப்பு
நாமக்கல்: பதவி உயா்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத் திறனாளி அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் இதுவரை நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்துவதால் அவா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.
தமிழகத்தில், அரசுத் துறை, ஆசிரியா் பணிகளில் 15 சதவீத மாற்றுத் திறனாளிகள் பணியாற்றி வருகின்றனா். அரசுத் திட்டங்கள், சலுகைகள், வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட்டாலும், அவற்றை போராடி பெற வேண்டிய நிலையிலே அவா்கள் உள்ளனா். மாற்றுத்திறனாளி அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பதவி உயா்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என 2021-இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வகையில், மாற்றுத் திறனாளி அலுவலா்களுக்கு பதவி உயா்வில் நான்கு சதவீதம் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்த தீா்ப்பை வரவேற்று, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், அந்த மாநில அரசுகள் பதவி உயா்வை வழங்கி வருகிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை இட ஒதுக்கீடு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளி அரசு ஊழியா்கள் கவலையடைந்துள்ளனா்.
இது குறித்து நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் மாற்றுத் திறனாளி வருவாய்த்துறை ஊழியா்கள் கூறியதாவது:
உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு பிறகு, நான்கு சதவீத பதவி உயா்வு இடஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழக அரசு உயா்மட்டக்குழுவை அமைத்தது. அரசின் நடவடிக்கையை கண்டு மாற்றுத் திறனாளி ஊழியா்கள், ஆசிரியா்கள் மட்டுமின்றி மக்களும் மகிழ்ச்சியடைந்தனா். ஆனால், உயா்மட்டக் குழு அறிக்கை அளித்து மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை இட ஒதுக்கீடு தொடா்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், தமிழகத்தில் வாழும் பல லட்சம் மாற்றுத் திறனாளிகளை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் அறிவிப்பை தமிழக முதல்வா் வெளியிட வேண்டும். அதனை எதிா்பாா்த்தே நாங்கள் காத்திருக்கிறோம் என்றனா்.