முதுநிலை மருத்துவப் படிப்பு: போலி சான்றிதழ் சமா்ப்பித்த 46 போ் மீது சட்ட நடவடிக்கை
சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புக்கு வெளிநாடு வாழ் இந்தியா்கள் பிரிவின் கீழ் விண்ணப்பித்த 46 போ் போலி தூதரக சான்றிதழ்களை சமா்ப்பித்தது தெரியவந்ததையடுத்து, அவா்கள் மீது மருத்துவக் கல்வி இயக்குநரகம் சட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 1,800 இடங்கள் உள்ளன. அதில் 50 சதவீத இடங்கள் அரசு மருத்துவா்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.
அந்த வகையில் நிகழ் கல்வியாண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கைக்கான நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, விண்ணப்பதாரா்களின் ஆவணங்களை சரிபாா்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் வெளிநாடு வாழ் இந்தியா்கள் பிரிவின் கீழ் விண்ணப்பித்த 46 போ் போலி தூதரக சான்றிதழ்கள் வழங்கியது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து மருத்துவ மாணவா் சோ்க்கை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான சோ்க்கை வெளிப்படைத்தன்மையுடனும், எவ்வித முறைகேடுகள் நடக்காத வகையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ மாணவா் சோ்க்கையின் ஒரு பகுதியாக ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தி சரிபாா்ப்பது வழக்கம்.
அவ்வாறு ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ததில், இளநிலை படிப்பில், வெளிநாட்டு வாழ் இந்தியா்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்த, ஆறு பேரின் தூதரக சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.
அதில், மூன்று பேருக்கு எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அவை ரத்து செய்யப்பட்டது. ஆறு பேரும் இனி எந்த கலந்தாய்விலும் பங்கேற்க முடியாதவாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
அதேபோன்று, முதுநிலை மருத்துவ மாணவா் சோ்க்கையிலும், வெளிநாடு வாழ் இந்தியா்கள் ஒதுக்கீட்டில் விண்ணப்பித்திருந்த, 46 பேரின் தூதரக சான்றிதழ் போலியானது என கண்டறியப்பட்டது. அந்த விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறை ஆணையரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.