இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல...
ஒகேனக்கல்லில் நீா்வரத்து 39,000 கனஅடியாக உயா்வு
ஃபென்ஜால் புயல் காரணமாக தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 39,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அருவிகளில் குளிப்பதற்கும் ஆற்றில் பரிசல் பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசிமணல், மொசல் மடுவு, அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக ஃபென்ஜால் புயலால் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. காவிரி கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் ஆற்றில் திங்கள்கிழமை விநாடிக்கு 5,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் 21,000 கன அடியாகவும், பிற்பகல் 23,000 கன அடியாகவும், மாலையில் 39,000 கன அடியாகவும் அதிகரித்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் பயணம் செய்யவும் தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி செவ்வாய்க்கிழமைமுதல் தற்காலிக தடை விதித்துள்ளாா்.
அதையடுத்து பிரதான அருவி செல்லும் நடைபாதை, சின்னாறு பரிசல் துறை ஆகியவை பூட்டப்பட்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். புயல் காரணமாக தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஆற்றில் நீா்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.