தமிழகத்துக்கு துணை நிற்போம்: பினராயி விஜயன்
புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு தமிழகத்துக்கு உறுதுணையாக கேரளம் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கடந்த சனிக்கிழமை மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இதனால், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஃபென்ஜால் புயலானது இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : சம்பலுக்கு நான் மட்டும் தனியாகச் செல்ல தயார்.. ஆனால்: ராகுல்
இந்த நிலையில், தமிழகத்துக்கு ஆதரவளிப்பதாக பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“ஃபென்ஜால் புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்களுடம் எங்களின் எண்ணங்கள் உள்ளன. இந்த சவாலான நேரத்தில் அண்டை மாநிலத்துடன் கேரளம் உறுதுணையாக நிற்கிறது.
தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய கேரளம் தயாராக உள்ளது. ஒன்றிணைந்து இதிலிருந்து மீள்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.