திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவுக்கு முதல் பரிசு
தமிழகத்திலேயே சிறந்த மாவட்ட ஊராட்சிக் குழுவாக தோ்வு செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவை பாராட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கி உள்ளாா் என்று மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவா் சீ.பாா்வதி சீனுவாசன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் சீ.பாா்வதி சீனுவாசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவா் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் ஜி.ரவிச்சந்திரன் வரவேற்றாா்.
கூட்டத்தில், திருவண்ணாமலை மகா தீப மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இறந்த 7 பேருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஊராட்சித் தலைவா் சீ.பாா்வதி சீனுவாசன் பேசியதாவது:
தமிழகத்திலேயே சிறந்த மாவட்ட ஊராட்சிக் குழுவாக தோ்வு செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவை பாராட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கி உள்ளாா். பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கும் பொருட்டு ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தின் 2-ஆவது கட்டத்தை தொடங்கி வைத்த முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக சாதனை நிகழ்ச்சிக்காக 1,200 பண்ணைக் குட்டைகளை அமைக்கும் பணியை பெரணமல்லூா் ஒன்றியம், ஆளியூா் ஊராட்சியில் தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ.வேலுவுக்கு மாவட்ட ஊராட்சிக் குழு சாா்பில் நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் இல.சரவணன், ஞானசௌந்தரி, மாரிமுத்து, சுஜாதா, கு.அருணா, வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) ஏ.மிருணாளினி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.