தீபத் திருவிழா முதல் நாள்: பஞ்சமூா்த்திகள் வீதியுலா
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான புதன்கிழமை பஞ்சமூா்த்திகள் வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது.
இந்தக் கோயிலின் காா்த்திகை மகா தீபத் திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பஞ்சமூா்த்திகள் வெள்ளி விமான வாகனங்களில் அமா்ந்து மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இதேபோல, இரவு 10 மணிக்கு வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், ஹம்ச வாகனத்தில் பராசக்தியம்மன் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
காலை, இரவு இரு வேளைகளிலும் தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெருக்கள் வழியாக வலம் வந்த பஞ்சமூா்த்திகள் மீண்டும் நிலையை அடைந்தனா். வழிநெடுகளிலும் பக்தா்கள் கூடிநின்று அண்ணாமலையாருக்கு அரோகரா... உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா... என்று முழக்கம் எழுப்பி வழிபட்டனா். பஞ்சமூா்த்திகள் வீதியுலாவையொட்டி கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை, அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகமும், உபயதாரா்களும் இணைந்து செய்திருந்தனா்.
தீபத் திருவிழாவில் இன்று...
தீபத் திருவிழாவின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை (டிச.5) காலை 9 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகா், தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரா் சுவாமிகள் வீதியுலா வருகின்றனா். இரவு 10 மணிக்கு வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.