சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
இயக்குநர் பாலாவுக்கு விழா!
சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இயக்குநர் பாலாவிற்கு விழா நடைபெற உள்ளது.
இயக்குநர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக இருந்து 1999 ஆம் ஆண்டில் சேது திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. சேதுவின் அபார வெற்றிக்குப் பின் நடிகர் சூர்யாவை வைத்து நந்தா திரைப்படத்தை எடுத்தார். அப்படமும் பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் சூர்யாவுக்கு நல்ல நடிகர் என்கிற பெயரையும் பெற்றுத்தந்தது.
அதன்பின், தனக்கென அழுத்தமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் எனப் பெயரெடுத்தார் பாலா. கடுமையான சண்டைக்காட்சிகள், பதற்றத்தைத் தரும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் என தன் திரைப்படங்களுக்கென தனி ரசிகர்களையே வைத்திருக்கிறார்.
நான் கடவுள் திரைப்படத்தின் உருவாக்கமும், நடிகர்களின் எதார்த்தமான நடிப்பிற்கும் இன்றுவரை அப்படம் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்படத்திற்கான சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார்.
பரதேசி படத்திற்குப் பின் பாலாவின் பெயர் சொல்லும் படம் எதுவும் அவருக்கு அமையவில்லை. நாச்சியார் வெளியாகி கவனம் பெற்றது. ஆனால், அதிர்வுகளைக் கிளப்பவில்லை. தொடர்ந்து, துருவ் விக்ரமை வைத்து அர்ஜுன் ரெட்டியின் தழுவலாக ’வர்மா’ படத்தை எடுத்தார்.
ஆனால், அப்படத்தில் திருப்தி இல்லாததால் நடிகர் விக்ரம் தன் மகனின் முதல் படம் பாலாவின் திரை மொழியிலிருந்தால் சரியாக இருக்காது என வேறொரு தயாரிப்பு நிறுவனத்தை அணுகினார். தொடர்ந்து, ’ஆதித்ய வர்மா’ என்கிற பெயரில் அப்படத்தை ரீமேக் செய்தனர்.
படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் துருவ் விக்ரமின் முகம் ரசிகர்களிடம் சென்றது. வர்மா சிக்கலால், வணிக ரீதியாக பாலாவின் பெயர் சரிவைச் சந்தித்தது. அதற்கு பின், நடிகர் சூர்யா தயாரிப்பில் அவரை நாயகனாக வைத்தே வணங்கான் படப்பிடிப்பைத் துவங்கினார்.
இதையும் படிக்க: இதுவரை எந்த நடிகருக்கும் கிடைக்காத சம்பளம்! அதிர்ச்சியளித்த அல்லு அர்ஜுன்!
ஆனால், பாலாவின் மேக்கிங்கும் படப்பிடிப்பில் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளும் சூர்யாவை பாதிக்க, அவர் உடனடியாக படத்திலிருந்து விலகினார். பொதுவெளி நாகரீகத்திற்காக இவரும் ’அன்பாக’ அறிக்கை வெளியிட்டு பிரச்னையை தங்களுக்குள் வைத்துக்கொண்டனர்.
சூர்யா கிளம்பியதும் அக்கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் இணைந்தார். பல நாள்களாக படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இயக்குநராக அறிமுகமான பாலா வருகிற டிச. 10 ஆம் தேதியுடன் (சேது வெளியான கணக்கின்படி 1999, டிச.10) சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதற்காக, அவரின் திரைத்துறை நண்பர்கள் இணைந்து விழா எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி, பல நடிகர்களின் நடிப்புத்திறனை அடையாளப்படுத்திய இயக்குநர் என இந்தியளவில் பெயரெடுத்த பாலாவை கொண்டாட வேண்டும் என்பதற்காக சக இயக்குநர்கள், அவருடன் பணியாற்றிய நடிகர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.