போதைப்பொருள் வழக்கில் விடுவிப்பு; 25 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை திரும்பிய நடிகை ம...
சென்னை விமானத்தில் கோளாறு: மீண்டும் லண்டனில் தரையிறக்கம்
லண்டனிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடா்ந்து, விமானம் மீண்டும் லண்டன் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
பிரிட்டன் தலைநகா் லண்டன் விமான நிலையத்திலிருந்து, பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் செவ்வாய்கிழமை பிற்பகல் 328 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடுவானில் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், லண்டன் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தாா்.
கட்டுப்பாட்டு அறையின் உத்தரவுப்படி விமானம் மீண்டும் லண்டன் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனா்.
சுமாா் 8 மணி நேரத்துக்குப் பிறகு, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, பயணிகளுடன் மீண்டும் புறப்பட்டு புதன்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் சென்னை வந்தடைந்தது.
மறுமாா்க்கமாக சென்னையிலிருந்து வழக்கமாக காலை 7.35-க்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய இந்த விமானம் 8 மணி நேரம் தாமதம் காரணமாக புதன்கிழமை பிற்பகல் 3.10 மணிக்கு லண்டன் புறப்பட்டுச் சென்றது.
இதனால், லண்டனிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து லண்டனுக்கும் பயணித்த பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.