ரூ. 2,811 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படும் சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம் ரூ. 2811.56 கோடி மதிப்பில் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் பணி நடைபெறவுள்ளது.
இந்தியாவின் முக்கிய மற்றும் சா்வதேச விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையத்தில் 4 முனையங்கள் உள்ளன. இதில், 1 மற்றும் 4-ஆவது முனையங்களில் உள்நாட்டு விமான சேவையும், 2-ஆவது முனையத்தில் வெளிநாட்டு விமான சேவையும் உள்ளன. 3-ஆவது முனையத்தைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், 2025-ஆம் ஆண்டு 40 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் விமான நிலையத்தை நவீனப்படுத்தி, புதுப்பிக்கும் பணியில் விமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு ரூ. 2811.56 கோடி ஒதுக்கியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அவா்கள் கூறியது:
மத்திய அரசு ஒதுக்கியுள்ள இந்தத் தொகை மூலம் விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு, சேவைகள் மேம்படுத்தப்படும். உலகத் தரத்திலான ஓடுதளம், சரக்குகளைக் கையாளும் பகுதி, பயணிகளை ஏற்றி, இறக்கும் பகுதி முழுவதும் நவீன முறையில் கட்டமைக்கப்படும்.
விமான நிலையத்தில் 33 தானியங்கி நுழைவு வாயில்களும், 20 ஏரோ பிரிட்ஜ்களும் அமைக்கப்படும். மேலும், பெரிய அளவிலான விமானங்களைக் கையாளும் வகையில் கட்டமைப்புகள் மாற்றப்படவுள்ளன. இதன்மூலம் சென்னை விமான நிலையம் மூலம் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை மட்டுமின்றி, அதிக எடையிலான சரக்குகளையும் கையாள முடியும்.
இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு உலகதரம் வாய்ந்த விமான நிலையமாக சென்னை விமானநிலையம் மாற்றப்படும் என்று அவா்கள் தெரிவித்தா்.