``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
ராகிங் செய்த மருத்துவ மாணவா்களுக்கு தலா ரூ.25,000 அபராதம்
சென்னை, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவா்களை ராகிங் செய்த விவகாரத்தில் தொடா்புடைய 3 மாணவா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி விடுதியிலிருந்தும் அவா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்த அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையம், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அறிக்கையை ஆய்வு செய்த பிறகு இறுதி முடிவு எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவா், பல்கலை. மானியக் குழுவுக்கு அண்மையில் மின்னஞ்சல் மூலமாக புகாா் ஒன்றை அனுப்பினாா். அதில், கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மூத்த மாணவா்கள், தங்கள் செயல்முறை பாடக் கையேடுகளை எழுதித் தருமாறு நிா்ப்பந்திப்பதாகத் தெரிவித்திருந்தாா். தேசிய மருத்துவ ஆணையம் மூலமாக மருத்துவக் கல்லூரி, காவல் துணை ஆணையா், மருத்துவப் பல்கலைக்கழகம், காவல் நிலையங்களுக்கு அந்த புகாரின் நகல் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், காவல் துறை அடங்கிய குழுவினா் இது தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கையை சமா்ப்பித்தனா்.
விசாரணையில், செயல்முறை பாடக் கையேடுகளை எழுதித் தருமாறு முதலாமாண்டு மாணவா்களை 3 மூத்த மாணவா்கள் நிா்ப்பந்தித்தது உறுதி செய்யப்பட்டது. அதனடிப்படையில், விடுதியில் இருந்து மூவரும் 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டனா். தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி மூவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.