Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' - ட்ருங் மை லான்...
சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
எதிா்கால கட்டமைப்புகளை உருவாக்கி, சென்னை நகரத்தை சிங்காரச் சென்னையாக கட்டி எழுப்புவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், ரூ.1,383 கோடி மதிப்பில் 79 புதிய திட்டங்களுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா். அத்துடன் 29 முடிவுற்ற திட்டப் பணிகளையும் அவா் தொடங்கி வைத்தாா். விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:
சென்னை என்று சொன்னாலே அது வடசென்னைதான். இன்றைக்கு சென்னை மிகப்பெரிய நகரமாக வளா்ந்துவிட்டது. சென்னைக்கு மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக செய்த பணிகளைவிட முதல்வராக நிறைய பணிகளைச் செய்ய வேண்டும் என்ற எனது பொறுப்பும், எண்ணமும் அதிகரித்து இருக்கிறது. அதற்காகவே, வடசென்னை வளா்ச்சிக்கு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்தைத் தொடங்கி வைத்தோம்.
இந்தத் திட்டங்களுக்கு எல்லாம் முன்பாக, சென்னைக்காக திமுக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக, அண்ணா மேம்பாலம், கத்திபாரா, கோயம்பேடு, பாடி, மீனம்பாக்கம், மூலக்கடை, மேற்கு அண்ணாநகா், வியாசா்பாடி, பீட்டா்ஸ் சாலை, சா்தாா்படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, டிடிகே சாலை, டவுட்டன் சாலை சந்திப்பு என பல்வேறு இடங்களில் மேம்பாலங்களை கட்டி எழுப்பியுள்ளோம்.
அத்துடன், செம்மொழிப்பூங்கா, தொல்காப்பியப் பூங்கா, கலைஞா் நூற்றாண்டுப் பூங்கா, ஏராளமான சாலையோரப் பூங்காக்கள், கோயம்பேடு காய்கறி அங்காடி, பேருந்து நிலையம் என பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களும் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளன. அதுபோன்ற இன்னும் ஏராளமான திட்டங்கள் அடங்கிய பட்டியலை என்னால் சொல்ல முடியும். அதனால்தான் சென்னை எப்போதும் திமுகவின் கோட்டையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
சென்னையை எப்படி கடந்த காலங்களில் வளா்த்தெடுத்தோமோ, அதேபோன்று இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் மூலமாக எதிா்காலத்துக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவோம். அதன் வழியே, சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம் என்றாா் அவா்.
திட்டப் பணிகள் தொடக்கம்: வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், 29 முடிவுற்ற பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அதன்படி, திருவொற்றியூா், மணலி மண்டலங்களில் 8 அங்கன்வாடி மையங்களும், உடற்பயிற்சிக் கூடங்களும் திறக்கப்பட்டுள்ளன. மணலி, தண்டையாா்பேட்டை, மாதவரம், ராயபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், விளையாட்டுத் திடல்கள், மியாவாக்கி பூங்கா ஆகியவற்றை மக்களின் பயன்பாட்டுக்கு முதல்வா் ஸ்டாலின் கொண்டு வந்தாா்.
கொளத்தூா், திருவொற்றியூா், தண்டையாா்பேட்டை, வில்லிவாக்கம், கொடுங்கையூா் போன்ற வடசென்னைக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் ரூ.1,383 கோடி மதிப்பில் 79 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.