சேலம்: புத்தகத் திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! - நடந்தது என்ன?
சேலம் புத்தகத் திருவிழாவானது தொடங்கப்பட்டு 6 -வது நாளாக சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதில், 200-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 10 மணிக்கு தொடங்கும் புத்தகத் திருவிழாவானது, இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில், தினந்தினம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர். மக்கள் குடும்பத்துடன் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். அப்படி பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய புத்தகத் திருவிழாவில், போதிய பாதுகாப்பு வசதி ஏதும் இல்லை என்கின்றனர் பொதுமக்கள் சிலர்.
கடந்த 02.12.2024 ஆம் தேதி இரவு 10 மணியளவில் புத்தகத் திருவிழா நடைபெறும் பள்ளப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மைதானத்தில், புத்தகத் திருவிழாவுக்காக எலக்ட்ரீஷியனாக வேலை செய்வதற்காக வந்த திருப்பத்தூர் மாவட்டம், ஏரிக்கொடியைச் சேர்ந்த கலீம் (56) என்பவர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “கடந்த சில நாட்களாக தொடர் மழைபெய்து வருவதால் சம்பவத்தன்று இரவு கலீம் கலைஞர் அரங்கங்கத்திற்கு பின் புறம் சென்றுள்ளார். அப்போது கீழே கிடந்த ஒயரை தெரியாமல் மிதித்துள்ளார். அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்” என்றனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “இது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் தான். ஆனால், மின்சாரம் செல்லக்கூடிய ஒயர்களை வெறுமனே கீழே போட்டதால்தான் அதுவும் நடந்துள்ளது. இதுன் தொடர்பாக விசாரித்தபோது அதிகாரிகள் ஹெவி வோல்டேஜ் மின்சாரம் பயன்படுத்துவதால், ஒயர்களை எலக்ட்ரிக் பைப் லைன் வழியாக கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட டெண்டர் எடுத்து வேலை செய்யும் நிறுவனம் அதை பொருட்படுத்தாமல் விட்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில் தான் நேற்று நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும்போதே கலைஞர் அரங்கம் பக்கத்தில் உணவு அரங்கு ஒன்றில் மின்சாரம் செல்லும் ஒயர் எரிந்தது. இதனால் நேற்று நடைபெறவிருந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தவில்லை” என்றனர்.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவியிடம் பேசியபோது, “மழையின் காரணமாக மின்சாரம் பழுதுப்பார்க்கச் சென்ற போதுதான் சம்பந்தப்பட்ட நபர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். அதிகாரிகளிடம் கூறி மின்சாரம் செல்லக்கூடிய பகுதிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளேன்” என்றார்.