நமக்குள்ளே... குழந்தைகளின் விபரீத மரணங்கள், விபத்துகள் அல்ல... கொடூரக் கொலைகளே!
குழந்தைகள் வளர்ந்து தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும் வயது வரை, அவர்களுடைய பாதுகாப்புக்கு பெற்றோர், பள்ளி, அரசாங்கம் உள்ளிட்ட சுற்றங்களே பொறுப்பு. ஆனால், குழந்தைகளைச் சுற்றி நடக்கும் மனிதத் தவறுகளால் அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவது, உச்சபட்ச கொடூரம்.
சென்னை அருகேயுள்ள குன்றத்தூரில் வீட்டில் எலிகளுக்காக வைக்கப்பட்ட விஷத்துக்கு, இரு குழந்தைகளின் உயிர் பறி போயிருப்பது, சமீபத்திய அதிர்ச்சி. வீட்டுக்குள் அளவுக்கு அதிகமாக வைக்கப்பட்ட எலி விஷத்தின் காரணமாக வாந்தி, மயக்கத்தைத் தொடர்ந்து குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழக்க, பெற்றோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
குழந்தையின் மரணங்களைப் பொறுத்தவரை, பெரியவர்கள் மற்றும் அரசாங்கத்தின் கவனக்குறைவால் ஏற்படுபவையே எண்ணிக்கையில் அதிகம். குப்புற விழுந்த குழந்தையால் அந்நிலையிலிருந்து மீள முடியாததால் ஏற்படும் மூச்சுத் திணறல் முதல், தூங்கும் தொட்டிலில் மாட்டிக்கொண்டு கழுத்து நெரிபடுவது வரை மரணங்கள் அச்சுறுத்துகின்றன.
`குழந்தைகளின் கைகளுக்கு எட்டும் வகையில் தரையிலோ, குறைவான உயரத்திலோ மருந்து, பூச்சிக்கொல்லி விஷம், ப்ளீச்சிங் பவுடர், ஃபினாயில் உள்ளிட்டவற்றை வைக்கக் கூடாது’ என்பது அரிச்சுவடி பாடம். ஆனால், அதை அலட்சியப்படுத்துவதால் பலி கொடுக்கப்பட்டிருக்கும் சின்னஞ்சிறு உயிர்கள், ஏகப்பட்டவை.
வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி முதல் நீர்நிலைகள் வரை மூழ்கி உயிரிழந்த குழந்தைகளைப் பற்றிப் படிக்கும்போதெல்லாம் பதறுகிறோம். ஆனாலும், அத்தகைய தவறுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
வெந்நீர், சூடான பால் உள்ளிட்டவை உடலில் கொட்டப்பட்டதால் மரணிக்கும் குழந்தைகள்; விறகடுப்பு முதல் பட்டாசு வரை நெருப்புக்கு இரையாகும் சிறுவர்கள்; உரிய வயதுகளில் உரிய தடுப்பூசிகளை வழங்காததால் நோய்த் தாக்குதலுக்கு பலியாகும் குழந்தைகள் என எல்லாவற்றிலும் நாமே குற்றவாளிகள்.
பாதுகாப்பற்ற பள்ளிக் கட்டடங்கள், பள்ளிப் பேருந்தின் ஓட்டைகள், ஆசிரியர்களின் கொடூர தண்டனைகள், சத்துணவு சமையற்கூடத்தில் கொதிக்கும் சாம்பார் பாத்திரம் என பள்ளிக்கூடங்களில் கவனக்குறைவு, அலட்சியம் மற்றும் தவறான அணுகுமுறைகள் குழந்தைகளின் உயிர்களைப் பறிக்கின்றன. இவற்றுடன் சாலைப் பள்ளங்கள் முதல் பழுதான மின்சார கம்பங்கள் வரை பலியாகும் உயிர்கள் என அரசாங்கத்தின் மீதான குற்றப்பத்திரிகையின் பக்கங்களும் மிகமிக அதிகமே.
இவை எல்லாம் விபத்துகள் அல்ல தோழிகளே... பெற்றோர், பள்ளி, அரசு என குழந்தைகளின் உலகத்துக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியவர்களே செய்யும் கொடூரக் கொலைக் குற்றங்கள். ‘இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. `குழந்தைகள் விஷயத்தில் ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்பதே முதல் விதி. உணர்வோம்... உணர்த்துவோம் சுற்றம், பள்ளி, அரசுக்கு!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்